வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: புதன், 12 அக்டோபர் 2016 (12:18 IST)

மோகன்லாலுக்கு நமக்கு தெரியாத இன்னொரு முகம் இருக்கிறது - நமிதா பேட்டி

மோகன்லாலுக்கு நமக்கு தெரியாத இன்னொரு முகம் இருக்கிறது - நமிதா பேட்டி

சுமார் 20 கிலோ எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரியாகியிருக்கிறார் நமிதா. மோகன்லாலுடன் அவர் நடித்திருக்கும் புலிமுருகன் கேரளாவில் வெற்றிகரமாக ஓடுகிறது. அந்த அனுபவங்களை நமிதா பகிர்ந்து கொண்டார்.


 
 
புலிமுருகன் படம் பற்றி சொல்லுங்க...?
 
புலிமுருகன் நம் தென்னிந்திய மொழிகளில் இதுவரை வந்திராத அளவுக்கு அட்வென்சர் வகை கதையாக இருந்தது. மிகவும் வித்தியாசமான இந்தக் கதையை எப்படி எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமானது. படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ஜுலி. ஒரு பணக்கார குடும்பத்தில் இருப்பவள். புலிமுருகனின் குணத்தைப் பார்த்து அவர்மீது காதல்வயப்படும் கேரக்டர். படம் முழுக்கவே புலிமுருகனுடனேயே இருந்து அவருக்கு ஆதரவாக இருக்கும் வேடம். ஒரு சூப்பர் ஸ்டார் படத்தில் ​இடம் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா? உடனே ஓகே சொல்லிவிட்டேன்.
 
இது மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்கிறார்களே...?
 
பொதுவாக மலையாள படங்கள் என்றாலே குறைவான பட்ஜெட்டில் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த படம் சுமார் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. 
 
மோகன்லாலுடன் நடித்த அனுபவம்…?
 
அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது நமக்கு தெரியும். ஆனால் நமக்கு அதிகம் தெரியாத அவரது இன்னொரு முகம் இண்டெலெக்சுவல். ஆமாம், அத்தனை புத்தகங்கள் படிக்கிறார். அவரது வாசிப்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. புலிமுருகன் கேரக்டரில் மோகன்லால் தவிர வேறு ஒருவரை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த பாத்திரமாகவே மாறினார். 
 
நீங்கள் பிராணிகளை அதிகம் நேசிப்பவர். உங்களுக்கு இந்த படம் அமைந்தது தற்செயலானதா?
 
என் வீட்டில் நான் இப்போது மூன்று சிட்சு வகை நாய்க்குட்டிகளை​ வளர்க்கிறேன். அவை நாய்கள் அல்ல என் குழந்தைகள். என் குடும்பத்தில் அவர்களும் இணைந்துவிட்டார்கள். இந்த கதை சொல்லும்போது ஆரம்பத்தில் இது வேட்டை கதை போல உள்ளதே என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் போக போக வன விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு படம் என்பது புரிந்தது.
 
அரசியல் சினிமா இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?
 
ஏன் இதில் என்ன கஷ்டம்? இரண்டும் வேறு வேறு. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சத்தமில்லாமல் செய்துகொண்டும் இருக்கிறேன்.
 
அடுத்தப் படங்கள்...?
 
பரத்துடன்  நடிக்கும் பொட்டு படம் அல்மோஸ்ட் ஓவர். ஜானி என்பவர் சொன்ன கதை நன்றாக உள்ளது. அடுத்த நகர்வுக்கு காத்திருக்கிறேன். இன்னும் சில படங்களி​ன் அறிவிப்பு​ம் வரும்​. மலையாளம் போலவே தமிழ், தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்.