வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2015 (14:25 IST)

’பாகுபலிக்காக செல்வந்தன் வெளியீட்டை தள்ளி வைத்தோம்’ - மகேஷ் பாபு பேட்டி

ஆந்திராவின் பிரின்ஸ், மகேஷ் பாபு. தமிழ் ரசிகர்களுக்கு அவரை தனியாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அவரது நந்து, குமரன் படங்களுக்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
 

 
முதல்முறையாக மகேஷ் பாபு நடித்த படமொன்று தெலுங்கில் வெளியாகும் அதேநாள் தமிழில் வெளியாகிறது. செல்வந்தன். தெலுங்கில் ஸ்ரீமந்துடு என்று பெயர். செல்வந்தன் 7 -ஆம் தேதி வெளியாவதையொட்டி சென்னை வந்திருந்தார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்.
 
தமிழில் நன்றாகப் பேசுகிறீர்களே?
 
நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். அதனால், தமிழில் நன்றாக பேசுவேன். 
 
அப்புறம் எப்படி தெலுங்கில் செட்டிலானீர்கள்?
 
தெலுங்கில் வாய்ப்பு கிடைத்ததால் தெலுங்குப்பட ஹீரோவானேன். தமிழில் நடிக்க வேண்டும் என்று எனக்கு நீண்டநாள் ஆசை.
 
இந்தப் படத்தைப் பற்றி சொல்லுங்கள்...?
 
தெலுங்கில் ஸ்ரீமந்துடு என்று பெயர். இதற்கு பணக்காரன் என்று பொருள். அதனால் தமிழில் செல்வந்தன் என வைத்திருக்கிறோம். இது கிராமத்துப் பின்னணியில் நடக்கும் கதை.
 
இனி எப்போது தமிழில் நடிக்கப் போகிறீர்கள்?
 
தொடர்ந்து தமிழில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். தெலுங்கில் எடுக்கும் போது அப்படியே சேர்த்து தமிழிலும் எடுக்கலாம் என யோசனை கூறியிருக்கிறார்கள். அதை செயல்படுத்தலாம் என இருக்கிறேன்.
 
அடுத்தப் படம்...?
 
அடுத்து பிரமோற்சவம் என்ற படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறேன். அதுவும் தமிழில் வரும்.
 
செல்வந்தனின் இயக்குனர், நாயகி...?
 
கொரட்டால சிவா இயக்கியிருக்கிறார். சிறப்பாக படத்தை தந்திருக்கிறார். நாயகி ஸ்ருதி. நான் கமல் சாரின் ரசிகன். அவரது மகளுடன் நான் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ஸ்ருதி திறமையானவர்.
 
பாகுபலி காரணமாகத்தான் ஸ்ரீமந்துடு வெளியாக தாமதமானதாக கூறுவது உண்மையா?
 
பாகுபலி படம் வெளியான போது இந்த படமும் வெளியாக இருந்தது. அது ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரான படம். எனவே, சில வாரங்கள் அது ஓட வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தாமதமாக ரிலீஸ் செய்ய முடிவு எடுத்தோம்.