வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Updated : புதன், 4 மே 2016 (13:11 IST)

கண்ணைப் பார்த்து ஆண்களை கணிப்பேன் - ஹைதராபாத்தில் அனுஷ்கா பேட்டி

கண்ணைப் பார்த்து ஆண்களை கணிப்பேன் - ஹைதராபாத்தில் அனுஷ்கா பேட்டி

எத்தனை நடிகைகள் வந்தாலும் ஆந்திராவில் அனுஷ்காதான் சென்சேஷனல். பாகுபலி இரண்டாம் பாகத்தில் அவர் செய்யப் போகும் நடிப்பு சாதனையைப் பார்க்கவும், அதுபற்றி பேசவும் ஆந்திராவும், தெலுங்கானாவும் தவம் கிடைக்கின்றன.

அனுஷ்காவுக்குப் பிடிக்கும் ஆண்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது அனுஷ்கா க்ரேஸ். 
 
ஆண்களை எப்படி எடைபோடுவீர்கள் என்ற கேள்விக்கு அனுஷ்கா அளித்த பதிலை படியுங்கள்.
 
"ஒருவர் கண்ணை பார்த்து அவர் எந்த மாதிரி ஆண் என்று கணிக்க முடியும். கண்களுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. அதுபோல் முகபாவம், பேச்சு, உடல் மொழிகளை வைத்தும் ஒருவரை எடை போடலாம். சிரிப்பும் ஒருவரின் தரத்தை வெளிப்படுத்தும். நான் ஆண்களின் கண்களைத்தான் முதலில் பார்ப்பேன்."


 
 
கொஞ்சம் விளக்க முடியுமா?
 
"நல்ல மனிதர் என்றால் பார்வையில் நேர்மை தெரியும். நேர்மையான ஆண்களை எனக்கு பிடிக்கும். அவர்களிடம் பேசி பழகுவேன். சில ஆண்கள் கண்ணாடி அணிந்து கண்களை மறைத்து விடுகின்றனர். அவர்கள் தங்கள் குணாதிசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கிறார்கள். எனக்கு கண்ணாடி அணியும் ஆண்களை சுத்தமாக பிடிக்காது. அவர்களை விட்டு விலகி சென்று விடுவேன்."
 
ஆண்களிடம் உங்களுக்குப் பிடித்த வேறு விஷயங்கள்...?
 
"சிரிப்பும் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிய வைக்கும். ஒளிவு மறைவு இல்லாமல் சிரிக்கும் ஆண்களை எனக்கு பிடிக்கும். அவர்களிடம் கள்ளம் கபடம் இருக்காது." 
 
இன்னும் ஏதாவது இருக்கிறதா?
 
"எளிமையாக இருக்கும் ஆண்களையும் விரும்புவேன். என்னை சுற்றிலும் நேர்மையானவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள்தான் என்னோடு இருக்கிறார்கள்."
 
உங்கள் பார்வையில் உங்களுக்குப் பிடித்த முழுமையான ஆண் யார்?
 
"சிறந்த முழுமையான மனிதருக்கு அடையாளம் எனது தந்தை. அவருக்கு இணையாக எந்த ஆணும் இல்லை என்பேன்."
 
சினிமாவில் நுழைந்தபோது நடித்தப் படங்கள் குறித்து யோசிப்பதுண்டா?
 
"சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சி, காதல் படங்களில் நடித்தேன். அந்த படங்கள் வெளிநாடுகளில் சுற்றும் மகிழ்ச்சியை எனக்கு அளித்தது."
 
அதிலிருந்து எப்படி மாறினீர்கள்?
 
"ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற உந்துதலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இதுபோன்ற படங்களில் நடிப்பது சிரமமாகத்தான் இருக்கிறது. அதையும் மீறி அந்த படத்துக்காக கிடைக்கும் வரவேற்புகளை நினைக்கும்போது சிரமங்கள் மறைந்து விடுகிறது."