வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2016 (11:12 IST)

ஜல்லிக்கட்டை காப்பாற்ற 'இளமி' எடுத்திருக்கிறேன் - இளம் இயக்குனரின் ஆவேச பேட்டி

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இளமி என்ற படம் தயாராகியுள்ளது. யுவன், அனுக்கிருஷ்ணா நாயகன், நாயகி. ஜோ புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஜூலியன் பிரகாஷ் எழுதி இயக்கியிருக்கிறார். படம் குறித்து பேசும் போது, ஜல்லிக்கட்டு முடக்கப்பட்டதன் ஆதங்கம் அவரிடம் வெடிக்கிறது. 

 
இளமி பற்றி சொல்லுங்கள்...? 
 
18 -ஆம் நூற்றாண்டில் நடக்கும் இந்தக்கதையில் ஜல்லிக்கட்டு மையக்கருவாக உள்ளது. அந்த காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த வடம் ஜல்லிக்கட்டு இன்று அடியோடு அழிந்து விட்டது. ஜல்லிக்கட்டில் பல வகைகள் இருந்தாலும் வடம் ஜல்லிக்கட்டு என்பது உயிரை பணயம் வைத்து விளையாடும் வீர விளையாட்டு. 
 
அதற்காக இந்தப் படத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்? 
 
முற்றிலும் அழிந்து போன இக்கலையை நாங்கள் திரையில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறோம். இதன் மூலமாக இப்பொழுது தடை செய்யப்பட்டு இருக்கும் ஜல்லிக்கட்டிற்கு ஒரு விடிவு பிறக்கும் என ஆணித்தரமாக நம்புகிறோம். இத்திரைப்படத்தை பார்க்கும் போது, 18 -ஆம் நூற்றாண்டில் நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள், ஜல்லிக்கட்டு காளையை தம் பிள்ளைகள் போல் நினைத்து பண்டுவம் பார்த்து, மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வாழ்நாள் எல்லாம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக பாவித்து ஜீவ காருண்யம் பேணி வந்தார்கள் என்பது தெரியவரும். 
 
இன்று அந்த காளைகளின் நிலை எப்படி உள்ளது? 
 
அன்று பிள்ளைகள் போல் வளர்க்கப்பட்ட காளைகள் இன்று அடி மாடுகளாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. அது முற்றிலுமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் இல்லை அடி மாடுகளுக்காக வலுக்கட்டாயமாக ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
 
இளமி படத்தை எடுத்ததன் நோக்கம் என்ன..? 
 
நிறைய இழந்து ஜல்லிக்கட்டு கலையை காப்பாற்ற வேண்டும் என்று இளமி திரைப்படத்தை எடுத்திருக்கிறேன். இந்த கலையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். 
 
படத்தில் பாடல்கள் உண்டா...? 
 
ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஐந்து பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. அதில் தீப்பறக்க முட்டிப்பாரு.. திமிலை நீயும் தொட்டுப்பாரு... என்று ஜல்லிக்கட்டை போற்றும் வகையில் அமைந்திருக்கும் பாடலாசிரியர் ராஜாகுருசாமியின் வரிகளுக்கு ஆந்தக்குடி இளையராஜா பாடி இருக்கிறார். இது ஜல்லிக்கட்டின் தேசிய கீதமாக தமிழகமெங்கும் ஒலிக்கும்.