வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 20 மே 2016 (12:43 IST)

மருது படத்துக்கு திருட்டு விசிடி வெளிவருமோ என பயப்படுகிறேன் - விஷால் பேட்டி

மருது படத்துக்கு திருட்டு விசிடி வெளிவருமோ என பயப்படுகிறேன் - விஷால் பேட்டி

திருட்டு டிவிடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. திருட்டு டிவிடிகள் திரையரங்குகளில்தான் தயாரிக்கப்படுகின்றன என விஷால் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.


 


அதற்கு திரையரங்கு உரிமையாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் மணியன் மறுப்பு தெரிவித்திருந்தார். விசாரித்ததில் அவருக்கு சொந்தமான திரையரங்கில் இருந்துதான் தோழா படத்தின் திருட்டு டிவிடி தயாரிக்கப்பட்டிருக்கிறது. 24 படத்தின் திருட்டு டிவிடி எந்தத் திரையரங்கில் எடுக்கப்பட்டது என்பது தெரிந்தும் அந்த திரையரங்கு மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வரவில்லை. அதனை வலியுறுத்தி விஷால், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இருவரும் பேட்டி அளித்தனர்.
 
விஷால்
 
பெங்களூரு ஓரியன் மால் திரையரங்கு மீது குற்றஞ்சாட்ட என்ன காரணம்...?
 
திருட்டு வி.சி.டி. தயாரிப்பதற்கு பெங்களூருவில் உள்ள ஓரியன் மால் தியேட்டர் உடந்தையாக இருந்திருக்கிறது. சமீபகாலத்தில் மட்டும் 7 படங்களின் திருட்டு வி.சி.டி. அந்த தியேட்டரில் இருந்து படமாக்கப்பட்டிருக்கிறது. அதில், ஆர்யா நடித்த வி.எஸ்.ஓ.பி., இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களும் அடங்கும். அந்த தியேட்டரில் இருந்துதான் திருட்டுத்தனமாக வி.சி.டி. தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், சூர்யா நடித்த, 24 படமும் அதே தியேட்டரில் இருந்து திருட்டுத்தனமாக படமாக்கப்பட்டிருக்கிறது. 
 
இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
 
இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒருவாரத்துக்கு முன்பு புகார் செய்தோம். அந்த தியேட்டர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
நாளை உங்கள் படம் வெளியாகிறதே...?
 
நான் நடித்த மருது படமும் வெளியாகிறது. அதுவும் திருட்டு வி.சி.டி.யாக வந்துவிடுமோ என்று பயப்படுகிறேன். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்து ஒருவாரம் ஆகிறது. இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று புரியவில்லை.
 
இந்த விவகாரத்தில் உங்கள் கோரிக்கை என்ன?
 
இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் உடனே தலையிட்டு திருட்டு வி.சி.டி. தயாரிக்க உடந்தையாக இருந்த தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
ஞானவேல்ராஜா
 
தமிழ் திரையுலகில் இப்போது 40 தயாரிப்பாளர்கள் தான் படம் தயாரித்துக்கொண்டு இருக்கிறோம். நாளுக்கு நாள் படம் தயாரிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்த நிலை நீடித்தால் சினிமா தொழிலே முழுவதுமாக அழிந்துவிடும்.எனவே, தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக தலையிட்டு இதில் ஒரு முடிவு எடுக்கவேண்டும். 
 
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்...?
 
சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம். இப்போது படஅதிபர்களுக்கு அவர்கள் தயாரிக்கும் படங்களில் இருந்து 20 சதவீதம் மட்டுமே வருமானம் வருகிறது. மீதி 80 சதவீதம் வருமானம் திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்களுக்கு போய்விடுகிறது. இதுபற்றி அமைய இருக்கும் புதிய அரசாங்கத்திடம், தயாரிப்பாளர்கள் சங்கம் முறையிட வேண்டும்.