வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2016 (12:34 IST)

மணிவண்ணன் என்னை சாணி அள்ள வைத்தார் - சுந்தர் சி. பேட்டி

மணிவண்ணன் என்னை சாணி அள்ள வைத்தார் - சுந்தர் சி. பேட்டி

சுந்தர் சி.யுடன் உரையாடுவது எப்போதுமே சுகமானது. படித்தால் கிடைக்காத அனுபவ அறிவு அவரது உரையாடலில் கொப்பளிக்கும்.


 


இளம் வயதிலேயே ரஜினி, கமலை இயக்க முடிந்ததற்கான காரணம் அவரது சினிமா குறித்த அனுபவ அறிவு. முத்தின கத்திரிக்காய் வெளியாகியிருப்பதை முன்னிட்டு நிருபர்களை சந்தித்தார்.
 
மணிவண்ணனின் நினைவு தினத்தில் என்ன நினைவுகூர்கிறீர்கள்?
 
நான் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியபோது முதல் நாள் படப்பிடிப்பில் திமிருடன் நின்று கொண்டு இருந்தேன். அவர் என்னை திட்டி கேமரா முன்னால் கிடந்த சாணியை அள்ளச் சொன்னார். அது எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று என்னை பக்குவப்படுத்தியது. நிறைய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அப்போது எடுத்த பயிற்சிதான் பிற்காலத்தில் சிறந்த இயக்குனராக என்னை உருவெடுக்க வைத்தது.
 
இப்போது வெற்றி பெறும் படங்களின் சதவீதம் குறைந்துவிட்டதே?
 
சினிமாவில் எந்த பயிற்சியும் இல்லாமல் படங்கள் டைரக்ட் செய்யும் பலரை பார்க்க முடிகிறது. ஒரு படத்தில் பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிபவர்கள், உடனே அடுத்த படத்திற்கு இயக்குனர் ஆகி விடுகிறார்கள். அனுபவம் இல்லாத இயக்குனர்களால் படங்கள் தோல்வி அடைகின்றன. தவறானவர்களிடம் தயாரிப்பாளர்களும் ஏமாந்து படங்கள் இயக்க வாய்ப்பு தருகிறார்கள். படம் தோல்வி அடைந்த பிறகு சினிமாவே வேண்டாம் என்று அந்த தயாரிப்பாளர்கள் ஓடி விடுகின்றனர்.
 
இதற்கு என்ன தீர்வு?
 
சினிமாவை நம்பி 100 குடும்பங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்து இயக்குனர்கள் படங்கள் எடுக்க வேண்டும். இயக்குனர்கள் கதை சொல்வதில் மயங்கி அவர்களை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யக் கூடாது. அனுபவம், திறமை இருக்கிறதா? இதற்கு முன்பு படங்களில் பணியாற்றி இருக்கிறார்களா? என்பதை பார்த்து பட வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். குறைந்தது இரண்டு படத்திலாவது உதவி இயக்குனராக பணியாற்றிவர்களுக்கே படங்கள் இயக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.
 
நீங்கள் இயக்குனராக்கியிருக்கும் வெங்கட் ராகவன் எப்படி?
 
மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து, சினிமாவில் எந்த வேலையும் செய்ய பழகிக்கொண்டு படிப்படியாக இயக்குனர் ஆனேன். அதேபோல் என்னிடம் 6 வருடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வெங்கட் ராகவனை முத்தின கத்திரிக்காய் படத்துக்கு இயக்குனர் ஆக்கி இருக்கிறேன். இவர் வசனம் எழுதுவதில் திறமைசாலி. நான் இல்லாத போது எனது படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். சிறப்பாக கதை எழுதுபவர்.
 
திடீரென்று நடிப்புக்கு வந்தது ஏன்?
 
டைரக்டராக இருந்த நான் கடந்த 5 வருடங்களாக நடிக்க ஆரம்பித்தேன். தற்போது மீண்டும் படங்கள் இயக்கி வருகிறேன். இதற்கிடையில் மலையாளத்தில் பிஜுமேனன் நடித்து வெளிவந்த வெள்ளிமுங்கா  மிகவும் பிடித்தது. எனது வயதுக்கேற்ற கதாபாத்திரம் என்பதால் நடித்தேன்.
 
வெள்ளிமூங்கா படத்தின் கதைக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறதே?
 
இந்த படத்தில் 25 சதவீதம் தான் மலையாள படத்தின் ரீமேக். மற்ற கதை முழுவதும் வெங்கட் எழுதியது. வசனமும் அவர் தான். மிகவும் சிறப்பாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
 
ஏன் பூனம் பஜ்வா?
 
கதைப்படி நாயகன் இளம் வயது பெண்ணை காதலிக்க வேண்டும். ஏற்கனவே எனது படங்களில் நடித்தவர், குடும்பங்கான இளம் தோற்றம் கொண்டவர். எனவே அவரை எனது ஜோடியாக நடிக்க வைத்தேன். பெரிய பட்ஜெட் படங்களில் எனது ஹீரோவுக்கு பிரபல நாயகிகள் நடிப்பார்கள். நான் இயக்குனர் என்பதை விட இதில் நடிகனாக இருக்கிறேன். அதற்கு பொருத்தமான ஜோடியாக பூனம் பஜ்வா நடித்திருக்கிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....