வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 16 ஜூலை 2015 (11:43 IST)

மாரி ஒரு லோக்கல் தாதா - தனுஷ் பேட்டி

தனுஷ் நடித்துள்ள மாரி நாளை வெளியாகிறது. மாரியுடன் போட்டியிடுவதாக இருந்த ரஜினி முருகன் ஆரம்பத்திலேயே விலகிக் கொண்டது. கடைசி நேரத்தில் கோதாவில் குதித்த வாலு, நீதிமன்ற தடையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போட்டியில்லாமல் நாளை தனியாக வெளியாகும் உற்சாகத்துடன் மாரி படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு தனுஷ் பதிலளித்தார்.
 

 
மாரி எந்த மாதிரியான படம்?
 
லவ், காமெடி, கமர்ஷியல் எல்லாம் கலந்த ஜனரஞ்சகமான படம். சென்னையில் நடக்கிற கதை. மாரி என்னுடைய கதாபாத்திர பெயர். படத்தில் மாரி ஒரு லோக்கல் தாதா.
 
கதாநாயகியாக யாரைப் போடலாம் என நாயகன் முடிவு செய்வது சரியா?
 
என்னைப் பொறுத்தவரை நான் யாருக்கும் இதுவரை சிபாரிசு செய்ததில்லை. அதை டைரக்டரே முடிவு செய்வார். ஹீரோயின் விஷயத்தில் நான் தலையிடுறதில்லை. சில படங்களில், ஸ்பாட்டுக்குப் போன பிறகுதான் ஹீரோயின் யார்ங்கிறதே எனக்கு தெரியும். மரியானில் அப்படிதான் நடந்தது. ஸ்பாட்டுக்கு போன பிறகுதான் ஹீரோயின் பார்வதி என்பது தெரிய வந்தது.
 
உங்கள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் மீண்டும் நடிப்பீர்களா?
 
அதுக்கு ஐஸ்வர்யா எனக்காக கதை எழுதணும். அது எனக்குப் பிடிக்கணும். பிடித்திருந்தால் நடித்தாலும் நடிக்கலாம்.
 
அப்படியென்ன அவர் இயக்கத்தில் நடிக்க தயக்கம்?
 
ஐஸ்வர்யா டைரக்ஷனில் நான் நடித்தால் இரண்டு பேரும் வீட்டில் இருக்க முடியாது. யாராவது ஒருத்தர் வீட்டில் இருந்தால்தான் குழந்தைகளை கவனிக்க முடியும்.

இந்திப் படங்களில் நடிப்பது பெயருக்காகவா? அதிக பணத்துக்காகவா?
 
இரண்டுமே கிடையாது. இந்தியில் தமிழ்ல வாங்குறதைவிட குறைவாதான் வாங்குறேன். சினிமாவுக்கு இன, மொழி பேதம் கிடையாது. அந்தவகையில் இன்னொரு மொழியில் நடித்தோம்ங்கிற திருப்திக்காகவே இந்தியில் நடிக்கிறேன். 
 

 
அடுத்து உடனே இந்திப் படம் நடிப்பீர்களா?
 
அதுக்காக காத்திருக்கேன். பத்து பதினைந்து கதைகள் கேட்டிருக்கிறேன். 
 
தென்னிந்திய நடிகர்களை இந்திப்படவுலகில் மதிப்பதில்லை, துரத்தப் பார்ப்பார்கள் என்று ஒரு கருத்து உண்டு. இப்போதும் அப்படித்தானா?
 
நிச்சயமாக இல்லை. நான் நடித்த ரெண்டு படங்களுக்குமே அங்க நல்ல வரவேற்பு தந்தார்கள். அங்குள்ளவர்கள் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார்கள்.
 
அப்பா, அண்ணன், நீங்கள் மூவரும் தனித்தனியாக வசிக்கிறீர்களே, ஏன்?
 
அது அப்பா கொடுத்த ஐடியாதான். வாழ்க்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அப்பா சொன்னபடி தனித்தனி வீடுகளில் வசித்து வருகிறோம். இது நீச்சல் கற்றுக் கொள்வது மாதிரிதான்.