1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 6 மார்ச் 2015 (11:47 IST)

கொம்பன் படம் குறித்து முத்தையா, ராஜ்கிரண், கார்த்தி பேட்டி

குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையாவின் இரண்டாவது படம் கொம்பன். கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா நடித்துள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் குறித்த கேள்விகளுக்கு முத்தையா, ராஜ்கிரண், கார்த்தி ஆகியோர் பதிலளித்தனர். அவர்களின் படம் குறித்த பேட்டி உங்களுக்காக.
முத்தையா
 
கொம்பனில் ஏன் ராஜ்கிரண்...?
 
இந்த கதையை பல வருடங்கள் முன்பே எழுதிவிட்டேன். என் ராசாவின் மனசிலே படத்தைப் பார்த்ததுமே முத்தையா கேரக்டருக்கு ராஜ்கிரண்தான் பொருத்தமாக இருப்பார்னு முடிவு செய்திட்டேன். பத்து வருஷத்துக்கு முன்னால் சத்யராiஜ வைத்து இந்த கதையை படமாக்குகிற வாய்ப்பு வந்தது. ஆனால் மாமனார் கேரக்டர் முத்தையாவாக ராஜ்கிரண்தான் நடிக்கணும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவருக்காகவே காத்திருந்து இந்தப் படத்தை எடுத்திருக்கேன்.
 
எப்போதும் கிராமத்து  கதைதானா...?
 
நான் இயக்குகிற படங்கள் எல்லாமே குடும்ப உறவுகளை சொல்லும் படமாகவே இருக்கும். எனக்கு தெரிந்ததை மட்டுமே எடுப்பேன். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். எனக்கு சிட்டி சப்ஜெக்ட் பழக்கமில்லை. கிராமத்து படம் மட்டுமே எடுப்பேன்.

ராஜ்கிரண்
 
இன்று சினிமா எப்படியிருக்கிறது...?
 
முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் சினிமாவில் ஐம்பது சதவீதம் நல்லவங்க இருந்தாங்க. ஐம்பது சதவீதம் கெட்டவங்க. இன்னைக்கு தொண்ணுnறு சதவீதம் கெட்டவர்களாக இருக்காங்க. சினிமா மட்டுமில்லை, ஒட்டு மொத்த சமூகமும் அப்படி மாறிப் போச்சி.
 
இன்றைய இயக்கனர்கள் பற்றி...?
 
ஒரு படம் ஹிட்னாலே, நான்தான் பெரிய இயக்குனர்னு ஆட்டம் போடுறாங்க. இயக்குனர்னா சும்மாயில்லை. ஆதி முதல் அந்தம்வரை தெரிஞ்சிருக்கணும். அனுபவம் இருக்கணும். ஆனா, இப்போ ஏதோ வந்தோம் எடுத்தோம்னு யாரையாவது பிடித்து ஒரு படம் பண்ணிடறாங்க. சினிமாவில் தொழில் தர்மம் இல்லாததனால்தான் சினிமா சீரழிவுப் பாதையில் போய்கிட்டிருக்கு.
கார்த்தி
 
பருத்தி வீரன் பாதிப்பு இந்தப் படத்தில் இருக்கா...?
 
கொம்பன்ல கிராமத்து கதாபாத்திரம்னு சொன்னதும் கொஞ்சம் யோசித்தேன். இருந்தாலும் அருமையான கதை. படப்பிடிப்பில் அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸை ரொம்பவே தொந்தரவு பண்ணினேன். ஒவ்வொரு காட்சி நடிச்சி முடிஞ்சதும், அவங்களை கூப்பிட்டு, எங்கயாவது பருத்தி வீரன் சாயல் தெரிஞ்சிச்சான்னு கேட்டுப்பேன். அவங்க இல்லைன்னு சொன்ன பிறகுதான் நிம்மதி வரும். அந்த அளவுக்கு பயந்துகிட்டுதான் நடிச்சேன்.