வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Suresh
Last Modified: திங்கள், 3 நவம்பர் 2014 (08:59 IST)

காவியத்தலைவன் கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாளுக்கு பெருமை சேர்க்கும் - வசந்தபாலன் (பேட்டி)

நவம்பர் 14 காவியத்தலைவன் வெளியாகிறது. தமிழில் சரித்திரப் படங்கள் அபூர்வம். காவியத்தலைவன் முப்பதுகளின் நாடக உலகை பின்னணியாகக் கொண்டது. அபூர்வத்திலும் அபூர்வம்.
 
ரஹ்மானின் இசை படத்தின் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் வசந்தபாலன் பகிர்ந்து கொண்டவை உங்களுக்காக.
 
காவியத்தலைவன் எப்படிப்பட்ட படம்?
 
இது சாதாரண கமர்யல் படம் கிடையாது. இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். நாடகம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் கதையோடு பாடல்கள் பயணிக்கும். 
 
மொத்தம் எத்தனைப் பாடல்கள்?
 
14 முழுநீளப் பாடல்கள். அவை தவிர சின்னச் சின்னப் பாடல்களும் இருக்கிறது. கவிஞர் வாலி எழுதிய அல்லி அர்ஜுனா நாடகப் பாடலில் மொத்தம் 6 காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த 6 காட்சிகளையும் 6 பாடலாக மாற்றியுள்ளார் ரஹ்மான். பா.விஜய் நான்கு பாடல்களை எழுதியுள்ளார். நா.முத்துக்குமார் வாங்க மக்கா வாங்க பாடலை எழுதியுள்ளார்.
 
பாடல்களில் என்ன விசேஷம்?
 
எல்லாப் பாடல்களுமே கதையோட்டத்தோடு சேர்ந்து வருபவை. அதனால் சிரத்தையெடுத்து பாடல்களை ரஹ்மான் தந்திருக்கிறார். பழமையான இசைக்கருவிகளை பயன்படுத்தி இசையமைத்துள்ளார். பாடகர் ஹரிச்சரண் 7 பாடல்கள் பாடியுள்ளார். வளரும் பாடகர் ஒருவர் ஒரே படத்தில் 7 பாடல்கள் பாடுவது இதுதான் முதல்முறை.
 
கிட்டப்பா, சுந்தராம்பாளின் காதல்தான் படம் என்ற பேச்சு இருக்கே?
 
நாடக நடிகர்களான கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். சித்தார்த், வேதிகா கதாபாத்திரங்களில் அவர்களது சாயல் இருந்தாலும் இந்தப் படம் அவர்களைப் பற்றியது கிடையாது.
 
படத்தில் சுவாரஸியமான காட்சிகள்..?
 
நிறைய சுவாரஸியம் வச்சிருக்கோம். அந்தக் காலத்தில் நாடகம் பார்க்க வரவழைப்பதற்கு ஒரு யுக்தி வைத்திருந்தார்கள். காலையில் தெருவுக்ள் நாடகக்குழு வந்து மாலையில் நடக்கப் போகும் நாடகத்தின் ஏதாவது ஒரு காட்சியை மேக்கப்போடு நடித்துக் காட்டுவார்கள். 
 
மக்கள் ஆர்வத்தோடு பார்க்கையில் அப்படியே நிறுத்தி, மிச்சத்தைப் பார்க்க மாலையில் கொட்டாய்க்கு வாங்க என்று கூறி விட்டு கிளம்புவார்கள். இப்படி தெருத்தெருவாக வந்து நடித்திருக்கிறார்கள். இது போன்ற சுவாரஸியமான விஷயங்கள் படத்தில் இருக்கிறது.
 
சுருக்கமாக படம் எப்படி...?
 
ஆக்ஷன் படம் மாதிரி காட்சிகள் சட் சட்டுன்னு மாறாது. விறுவிறுப்பான சேஸிங் கிடையாது. ஆனால் சுவாரஸியமான காட்சிகள் உண்டு. நீரோடை மாதிரி திரைக்கதை உண்டு. ரசிகர்கள் அதற்கேற்ற மனநிலையோடு தியேட்டருக்கு வரணும்.