வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Suresh
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2016 (09:12 IST)

ஜர்னலிஸ்ட் ஆக ஆசைப்பட்டேன் - நடிகை வசுந்தரா காஷ்யப் பேட்டி

நடிகைகளில் இரண்டு விதம் உண்டு. ஒன்று பண திருப்திக்காக நடிப்பவர்கள். இன்னொரு ரகம் கதை, கதாபாத்திரம் திருப்தியாக இருந்தால் மட்டுமே நடிப்பவர்கள்.


 

 
இவர்களில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் நடிகை வசுந்தரா காஷ்யப்.
 
வட்டாரம் படத்தில் அறிமுகமாகி, பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று, போராளி படங்களின் மூலம் அங்கீகாரம் பெற்றவர். நடுவுல கொஞ்சம் ஆளையே காணோம். நேரில் சந்தித்தபோது ஏன் என்று கேட்டோம்.
 
ஏன் இந்த இடைவெளி?
 
நான் என்றைக்கும் படங்களின் எண்ணிக்கையில் ஆர்வம் காட்டுவதில்லை. எனக்கு மனதிருப்தி உள்ள பாத்திரங்களில்தான் நடிப்பேன்.
 
வழக்கமான கமர்ஷியல் படங்களில் நடிக்க மாட்டேன். அப்படிப்பட்ட படங்களில் நடிக்க நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை.
 
இப்போது எந்தப் படத்தில் நடிக்கிறீர்கள்?
 
மைக்கேல் ஆகிய நான், புத்தன் இயேசு காந்தி என்று இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இரண்டுமே தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் மைக்கேல் ஆகிய நான் ஒரு ஹாரர் படம்.
 
புத்தன் இயேசு காந்தி சற்றே மாறுபட்ட படம் . இதில் எது  முதலில் வந்தாலும் அது என் பத்தாவது படமாக இருக்கும். இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். அது ஒரு பீரியட் ஃபிலிம். சிலநூறு ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை.
 
அதிசயா என்று இருந்த பெயரை ஏன் வசுந்தரா என்று மாற்றினீர்கள்? பல வசுந்தராக்கள் இருக்கிறார்களே?
 
அதிசயா என்பது இயக்குனர் சரண் வைத்த பெயர். ஒரு செண்டிமெண்டுக்காக அதை வைத்தார். வசுந்தரா என்பது என் சொந்தப் பெயர், ஒரிஜினல் பெயர்.
 
வசுந்தரா தாஸ், வசுந்தரா ராஜே என்று இருக்கிறார்கள். எனவேதான் நான் வசுந்தரா காஷ்யப் என்று மாற்றிக் கொண்டேன். என் இயற்பெயரை மாற்ற விரும்பவில்லை.
 
சினிமா உலகம் பற்றி நடிக்க வருவதற்கு முன் உங்களிடம் இருந்த அபிப்ராயம் இன்று மாறி உள்ளதா?
 
நாங்கள் சினிமாவே பார்க்காத குடும்பம். வீட்டில் பெரிதாக சினிமா பார்க்க அனுமதி இல்லை. ஆர்வமும் இல்லை. எனவே சினிமா உலகம் பற்றி எந்த அபிப்ராயமும் இல்லாமல் இருந்தது. 
 
சினிமாவுக்கு வந்த பின் படப்பிடிப்பில் எல்லாம் திமிராக நடந்து கொள்வார்கள். ஆடம்பரமாக இருப்பார்கள் என்றெல்லாம் நினைத்தேன்.
 
ஆனால் நான் என் முதல் படத்தில் நடித்த போது எல்லாருமே நட்புடன் பழகினார்கள். நாங்கள் ஒரே குடும்பம் போல இருந்தோம். அதைப்பார்த்த பின் என் அபிப்ராயம் மாறியது.
 
சினிமாவில் வெற்றி பெற என்ன தேவை என்று நினைக்கிறீர்கள்?
 
திறமை வேண்டும். அதிர்ஷ்டமும் வேண்டும். கடின உழைப்பும் தேவை. திறமை இருந்தால் மட்டும் போதாது. அது போலவே கடின உழைப்புடன் திறமை, அதிர்ஷ்டம் எல்லாமும் அமைய வேண்டும்.
 
நீங்கள் எந்தமாதிரியான படங்களின் ரசிகை?


 

 
சொன்னால் நம்ப மாட்டார்கள் நான் துறு துறுவென்று கலகலப்பாக இருப்பேன் படபட வென்று பேசுவேன். ஆனால் எனக்கு சீரியஸான படங்கள்தான் பிடிக்கும்.
 
சத்யஜித்ரே படங்கள் போன்றவை மிகவும் பிடிக்கும். கமர்ஷியல் படங்களில் வித்தியாசமான கதை இருந்தால் பிடிக்கும். மற்றபடி நிறைய படங்கள் பார்க்கும் ரகமல்ல நான்.
 
உங்களுக்குள்ள வித்தியாசமான குரல் பலமா? பலவீனமா?
 
என் குரல் பாதிபேருக்குப் பிடிக்கும். பாதிபேருக்கு பிடிக்காது. என் குரல் வித்தியாசமாக இருக்கிறது என்று பலரும் கூறுவதுண்டு. சிலபடங்களில் நான் சொந்தக் குரலில் பேச விரும்புகிறார்கள், சிலபடங்களில் சொந்தக் குரல் வேண்டாம் என்று டப்பிங் பேச வைக்கிறார்கள்.
 
என் படங்களில் டப்பிங் வேறு யாராவது பேசினால் என் நண்பர்கள் என்னடி ஒரு மாதிரியாக இருக்கிறது. நன்றாக இல்லை என்பார்கள்.
 
நடிப்பது தவிர வேறு எதுவாக ஆக ஆசைப்பட்டீர்கள்?
 
எனக்கு மீடியாவில் ஆர்வம். ஜர்னலிஸ்ட் ஆக ஆசைப்பட்டேன். நான் ஆங்கில இலக்கியம் படித்ததே அதற்காகத்தான். இப்போது நான் நடித்துள்ள புத்தன் இயேசு காந்தி படத்தில் கூட பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன்.