வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (13:37 IST)

நான் நடிகையானது விதி - நித்யா மேனன் பேட்டி

நான் நடிகையானது விதி - நித்யா மேனன் பேட்டி

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு நித்யா மேனன் சிறந்த உதாரணம். குள்ளமாக பார்க்க சின்ன பெண்ணாக தெரிந்தாலும், அவரது கோபங்கள் பெரியவை. நித்யா மேனன் என்றால் இன்டஸ்ட்ரியில் திமிர் என்றுதான் அர்த்தப்படுத்துகிறார்கள். அவரது திமிர் எப்படிப்பட்டது? நித்யா மேனனே சொல்கிறார் .


 
 
இவ்வளவு கோபத்தை வைத்துக் கொண்டு எப்படி நடிகையானீர்கள்?
 
நான் நடிப்பேன், நடிகையாவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. சின்ன வயதிலேயே அக்கிரமங்களை கண்டால் எனக்கு ஆகாது. ஆவேசப்படுவேன். அநீதிகளையும், அக்கிரமங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல, பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்றுதான் விரும்பினேன்.
 
நடிகையானது...?
 
அது விதி. 
 
ஆனாலும், இப்போது நீங்கள் ஒரு வெற்றி பெற்ற நடிகை...?
 
எந்தத் துறையாக இருந்தாலும் கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு உழைத்தால் ஜெயிக்கலாம். இது என் வாழ்க்கையில் நிரூபணம் ஆகி இருக்கிறது.
 
உங்களைப் பற்றி பிறர் கமெண்ட் செய்வதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
 
நித்யாமேனன் திமிர் பிடித்தவள், அகம்பாவம் இருக்கிறது என்றெல்லாம் என் பின்னால் பலர் பேசுவது எனக்கு தெரியும். அதை நான் கண்டு கொள்வதில்லை. நான் எப்படியோ அப்படி இருக்கவே ஆசைப்படுகிறேன்.
 
இப்படியொரு இமேஜ் ஏற்பட என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
 
சினிமாவில் நடித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. என்னிடம் நடிக்க கேட்டு வரும் எல்லா படங்களையும் நான் ஒப்புக்கொள்வதும் இல்லை. கதை பிடித்து இருந்தால் மட்டுமே நடிக்கிறேன். இதை வைத்து நான் தலைக்கனம் பிடித்தவள் என்கிறார்கள் அதுபற்றி கவலைப்படவில்லை.
 
சின்னச் சின்ன வேடங்களிலும் நடிக்கிறீர்களே...?
 
ருத்ரம்மாதேவியில் நடித்ததை வைத்து கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்த படத்தின் கதை பிடித்ததால் நடித்தேன். அதில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்.
 
பாடுகிறீர்களே...?
 
எனக்கு பாடுகிற திறமை உண்டு. பள்ளியில் படிக்கும் போது பாடியிருக்கிறேன். இப்போது சினிமாவில் பாட வாய்ப்பு வருகிறது.
 
நடிகை, பாடகி... எது இஷ்டம்?
 
அப்படி கேட்டால் பாடகி என்றுதான் சொல்வேன்.