வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2015 (11:29 IST)

இந்த கதையை புதுசு என்று சொல்ல மாட்டேன் - ரீங்காரம் இயக்குனர் பேட்டி

ஹரி இயக்கிய சேவல் படத்தை தயாரித்த ஜே ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் ரீங்காரம். படத்தை இயக்கியிருப்பவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி, பாலசந்தர், மூர்த்தி, 'அரசு' சுரேஷ் என பல இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த பரந்துபட்ட அனுபவம் பெற்றவர். ரீங்காரம் குறித்து அவரிடம் பேசியபோது.
படம் பற்றி சொல்லுங்க...?
 
பொருட்செலவு, பிரமாண்டங்கள் மத்தியில் மனதைத் தொடும் கதைகளும் காட்சிகளுமே வெற்றி பெறும்; பேசப்படும். அந்த வகையில் உணர்வுகளின் உன்னதம் பேசும் படம்தான் ரீங்காரம். இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம். அதைப் பின்னணியாக வைத்து, திருச்சியை கதைக் களமாக கொண்டு உருவாகியிருக்கிறது.
 
கதைதான் இந்தப்பட தயாரிப்பாளரை படம் தயாரிக்க வைத்ததா?
 
கதையைவிட அதன் திரைக்கதையால் ஈர்க்கப்பட்டே தயாரிப்பாளர் ஜின்னா ரீங்காரத்தை தயாரிக்க முன் வந்தார்.
 
கதையின் சிறப்பம்சம் என்ன?
 
இது ஒரு நாளில் நடக்கும் கதை. கதையின் விறு விறுப்புக்கும் வேகத்துக்கும் வேகத்தடை வேண்டாம் என்று படத்தில் இரண்டே பாடல்கள்தான். ஒன்றை குட்டிப்புலி 'அருவா மீச' புகழ் பத்மலதா பாடியுள்ளார்.
 
ஹீரோ, ஹீரோயின் யார்?
 
பாலா என்கிற புதுமுகம் நாயகன். பிரியங்கா நாயகி. கலாபவன் மணி, ஜெயபாலன் நடித்துள்ளனர். ஜெயபாலன் இருட்டில் வாழும் 'ஆடுகளம்' பூதமாக வித்தியாச வேடம் தாங்கியுள்ளார். வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் சிங்கப்பூர் தீபன் சிரிக்க வைப்பார்.

படம் என்ன நிலையில் உள்ளது?
 
இதுவரை 25 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப்  படப்பிடிப்பில் இருக்கிறோம்.
ரீங்காரம் திரையில் இதுவரை சொல்லப்படாத புதிய கதையா?
 
மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டு மொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில் தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை. இந்த இரண்டு விதமான உணர்வுகளையும் சரிவர பயணம் செய்து பார்த்த மனிதர்களிடமிருந்தும், படித்த புத்தகங்களிடமிருந்தும் எடுத்து சொல்லியிருக்கிறேன். இதை ஓர் அனுபவமாக உணர வைத்திருக்கிறேன். ஆனால் இதை புதுசு என்று சொல்லமாட்டேன்.
 
படம் ரசிகர்களை கவருமா?
 
தமிழ் ரசிகர்கள் என்றும் புதுமையை ரசிப்பவர்கள். புதிய கதை சொல்லிகளை ஆராதிப்பவர்கள். ரீங்காரத்தையும் வரவேற்பார்கள்.