1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 24 ஏப்ரல் 2016 (13:45 IST)

என் மார்க்கெட் சரியவில்லை - ஸ்ரேயா பேட்டி

த்ரிஷாவுடன் சினிமாவுக்கு வந்தவர் ஸ்ரேயா. தமிழில் வாய்ப்புகள் இல்லை எனினும் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பிற மொழிகளில் அவ்வப்போது நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். தனது இளமை குறித்தும், இன்னும் நாயகியாக தொடர்வது குறித்தும் அவர் மும்பையில் அளித்த பேட்டியின் தமிழ் வடிவம் உங்களுக்காக.


 

 
15 வருடங்களாக சினிமாவில் தாக்குப் பிடிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
 
நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. இவ்வளவு காலம் ஒரு நடிகையால் கதாநாயகியாக தாக்குப்பிடிப்பது கஷ்டம். அக்கா, அண்ணி வேடங்கள் என்று மாறி இருப்பார்கள். ஆனால் எனக்கு தொடர்ந்து கதாநாயகி வேடம் வந்து கொண்டு இருக்கிறது. வருடத்துக்கு இரண்டு படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். எல்லா படங்களுமே வெற்றி படங்கள்தான்.
 
உங்களை மிஸ் இளமை என்கிறார்களே...?
 
என் உடம்பு சினிமாவில் அறிமுகமானபோது எப்படி இருந்ததோ அப்படியே இன்னும் இருப்பதாக பலர் பாராட்டுகிறார்கள். இந்த பாராட்டுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 
 
உங்கள் முதல் படம், வருடம் நினைவிருக்கிறதா?
 
நான் நடித்த முதல் தெலுங்கு படமான இஷ்டம் 2001-ல் திரைக்கு வந்தது. அந்த படம் பெரிதாக ஓடவில்லை. ஆனாலும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பார்வை என் மீது விழுந்தது. 
 
எந்தப் படத்திற்குப் பிறகு கவனிக்கப்படும் நடிகையானீர்கள்?
 
சந்தோஷம் தெலுங்கு படத்துக்கு பிறகுதான் பட வாய்ப்புகள் குவிந்தது.
 
ஆரம்பகால சாதனையாக நீங்கள் நினைப்பது...?
 
2005 - இல் மட்டும் தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தேன். இது சாதாரண சாதனை இல்லை.
 
நீண்டகால சாதனை...?
 
தினமும் சினிமாவுக்கு புதிய கதாநாயகிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் என் மார்க்கெட் சரியவில்லை. எனது இடத்தை யாரும் பிடிக்கவில்லை. இந்தி படங்களிலும் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன்.
 
புதிதாக எந்த இந்திப் படத்தில் நடிக்கிறீர்கள்?
 
தமிழில் பிரகாஷ்ராஜ், சினேகா நடித்த உன் சமையல் அறையில் படம் இந்தியில் தயாராகிறது. அந்த படத்தில் சினேகா நடித்த வேடத்தில் நடிக்கிறேன். நானா படேகரும் என்னுடன் நடிக்கிறார். 
 
வாழ்க்கையில் மறக்க முடியாதது...?
 
நான் இதுவரை நடித்ததில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படம் சிவாஜி. அந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அதிர்ஷ்டம்.