வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. நட்சத்திர பேட்டி
Written By John
Last Updated : புதன், 2 ஏப்ரல் 2014 (11:27 IST)

என்னை அரசியலில் இழுத்து விடதீர்கள் - வடிவேலு பேட்டி

வடிவேலு இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடித்து வெளிவரும் தெனாலிராமன் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று நடந்தது. அதன் பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு வடிவேலு பதிலளித்தார். எத்தனை ஆண்டுகள் கழிந்து வந்தாலும் தமிழின் நம்பர் ஒன் காமெடியன் நானே என்ற கெத்தும், அரசியலில் எந்தவகையிலும் (கொஞ்ச நாளைக்கேனும்) சம்பந்தப்படக் கூடாது என்ற எச்சரிக்கையும் அவரது பேச்சில் வெளிப்பட்டது. 
 
ஏன் இந்த இரண்டு வருட இடைவெளி...?
 
என்னிடம் எல்லோருமே ஏன் இந்த 2 வருட இடைவெளி என்று கேட்கிறாங்க. நடந்தது எல்லாம் உங்களுக்கே தெரியும். கடந்த இரண்டு வருஷமா எனக்கு நல்ல ஓய்வு கிடைச்சது. அது காலத்தோட கட்டாயம். அதனால எனக்கு எந்த வேதனையும் கிடையாது. எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வரத்தான் செய்தது. நான்தான் வேண்டாம்னு சொன்னேன்.
Vadivelu

ஏன் அப்படி...?
 
அடுத்து நடிக்க வந்தால் கிங் மாதிரி இருக்கணும்னு விரும்பினேன். புலிகேசி மாதிரி ஒரு கதைக்கு நீண்ட நாள்களா காத்திருந்தேன். அப்போதான் யுவராஜ் தயாளன் இந்த கதையைச் சொன்னார். கதை எனக்குப் பிடிச்சது. அதனால் நடிக்க ஒத்துகிட்டேன்.
 
 

ஏஜிஎஸ் எப்படி இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்தது?
 
ஏஜிஎஸ்ல இருந்துதான் எனக்கு போன் செய்து, நீங்க இந்தப் படத்தில் நடியுங்க, நாங்க தயாரிக்கிறோம்னு சொன்னாங்க. இந்தப் படத்தை தயாரித்தால் படம் வெளிவராது என்று அவங்களுக்கு பலர் போன் செய்து சொல்லியிருக்காங்க. அதையும் மீறி இந்தப் படத்தை தயாரிச்ச அவங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
நாயகி கிடைப்பதும் கஷ்டமாக இருந்ததாமே?
 
பல நடிகைகளை தேர்வு செய்தோம். அப்படி செலக்ட் ஆனவங்க எல்லாம், இவரோட நடிச்சா படம் வெளிவராது, அப்படியே வெளிவந்தாலும் படத்தை ஓடவிடமாட்டாங்கன்னு சொன்னாங்க. அதனாலயே பலர் நடிக்காம போய்டாங்க. ஏஜிஎஸ் நிறுவனம் டிக்கெட் போட்டு வரவழைச்சா இங்க உள்ளவங்க சொந்த செலவில் டிக்கெட் போட்டு அவங்களை ஊருக்கு அனுப்பி வைப்பாங்க. இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகும் இந்தப் படத்தில் நாயகியாக நடிச்ச மீனாட்சி தீக்ஷித்துக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
 
 

நடுவில் படத்தை கைவிட்டதாகவும் வதந்தி கிளம்பியதே...?
 
ஷுட்டிங் முடிந்து செட்டை கலைத்தால் வடிவேலின் படம் நின்னுடிச்சி என்று வாடகை சைக்கிள் எடுத்து எல்லோரிடமும் சொன்னவர்களும் இருக்கிறார்கள்.
பிற மொழிப் படங்களில் இந்த காலகட்டத்தில் நடித்திருக்கலாமே?
 
தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டின் ரேஷன் கார்டிலும் என்னுடைய பெயர் இல்லையே தவிர அந்தக் குடும்பங்களில் ஒருவனாகதான் என்னை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் எனக்கு பட வாய்ப்பு தரவே பயந்த போது பிற மொழிகளில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. மலையாளத்திலும், தெலுங்கிலும் நடித்திருந்தால் வடிவேல் ஊரை காலி பண்ணிட்டு போய்டான் என்று பேசியிருப்பார்கள். அதனால்தான் அந்தப் படங்களை ஒப்புக் கொள்ளவில்லை.
 
அரசியல் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
 
என்னை அரசியலில் மட்டும் இழுத்து விடாதீங்க. நான் ஒரு காமெடி நடிகன். இனி அனைவரையும் சிரிக்க வைப்பதையே என்னுடைய கடமையாகக் கொண்டு செயல்படுவேன்.