1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 23 மே 2015 (13:22 IST)

கார்த்தி என்னைவிட திறமைசாலி - சூர்யா பேட்டி

மாஸ் படம் ரக்ஷுடு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. சமீபத்தில் நடந்த ரக்ஷுடு பாடல்கள் வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்து கொண்டு பேசினார். பிரபாஸும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதன் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 
 
மாஸ் தெலுங்கில் வெளியாவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
தெலுங்கு ரசிகர்கள் என் மீது மிகவும் அன்பு காட்டுகிறார்கள். என் படங்களையும் விரும்பிப் பார்க்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மேல் காட்டும் அன்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ரக்ஷுடு பற்றி சொல்லுங்கள்...?
 
ரக்ஷுடு படத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டு பணியாற்றியுள்ளோம். வெங்கட் பிரபு சிறப்பாக இயக்கியுள்ளார். யுவன் நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். ‘ரக்ஷுடு’ படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 
 
பிரபாஸ் உங்கள் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறாரே?
 
நடிகர் பிரபாஸ் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. அவர் இனிமையானவர். நான் படப்பிடிப்பில் இருந்தபோது ஒருநாள் என்னை அவரது வீட்டுக்கு மதிய விருந்துக்கு அழைத்தார். பிரியாணி சாப்பிட வைத்தார். அதன் ருசியை என்னால் மறக்க முடியாது. அவரது குடும்பத்தினர் என்னை அன்போடு உபசரித்தார்கள்.
அவர் நடித்து வரும் பாகுபலி பற்றி...?
 
பாகுபலி படத்தை நாடே ஆவலோடு எதிர்பார்க்கிறது. அப்படம் பெரிய ஹிட்டாகும்.
 
இவ்வளவு உயரம் தொட்டபிறகும் அடக்கமாக இருக்கிறீர்களே, எப்படி?
 
எவ்வளவு உயரத்துக்கு போனாலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்று அப்பா சொல்லி தந்து இருக்கிறார். அதன்படிதான் வாழ்கிறேன். நடிகர், நடிகைகள் புகழ், இமேஜ், வாழ்க்கை எல்லாமே நீர்க்குமிழி மாதிரிதான் எந்த நேரத்திலும் உடைந்து விடும். கோடிக்கணக்கான மக்கள் எங்களை ரசிக்கிறார்கள். அதை பார்த்து அகங்காரம் வரக்கூடாது. இவ்வளவு வரவேற்புகள் கிடைப்பதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம். ஏதோ ஒரு சக்திதான் இத்தனையும் வாங்கித் தந்து இருக்கிறது என்பதை உணர வேண்டும். 

வெற்றி தோல்வியை எப்படி பார்க்கிறீர்கள்?
 
வெற்றி, தோல்வியை நான் சமமாகவே பார்க்கிறேன்.
கார்த்தி எங்களுக்குப் போட்டியா?
 
பலரும் இப்படி கேட்கிறார்கள். கார்த்தியை பொறுத்தவரை என்னைவிட திறமைசாலி. படத்தின் திரைக்கதை, காட்சி அமைப்பு, படப்பிடிப்பு எல்லாவற்றிலும் கார்த்தி திறமையாக வருவதை கண்டு வியந்து இருக்கிறேன்.
 
கார்த்தியின் விருப்பம் படம் இயக்க வேண்டும் என்பதுதானே?
 
டைரக்டராக வேண்டும் என்ற ஆசைதான் கார்த்தியிடம் இருந்தது. அதற்காகவே மணிரத்னத்திடம் இணைந்து உதவி இயக்குனர் பயிற்சி பெற்றார். ஆனால் சந்தர்ப்பந்த சூழ்நிலை நடிகனாக்கி விட்டது. 
 
36 வயதினிலே படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடும் எண்ணம் உள்ளதா?
 
36 வயதினிலே படத்தில் ஜோதிகாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிகிறது. ஆமாம், படத்தை தெலுங்கில் வெளியிடும் திட்டம் உள்ளது.