வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2015 (09:47 IST)

சினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல, ஜனநாயகமும்கூட - கமல் பேட்டி

நேற்று மாலை சென்னையில் பாபநாசம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு. கமல், கௌதமி உள்பட படத்தில் நடித்தவர்கள் பங்கு பெற்றனர். இந்த சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார்.

பாபநாசம் படம் குறித்து சொல்லுங்கள்?
 
ஒற்றை ஆளாக இந்த படத்தை நான் மட்டும் உருவாக்கியதுபோல் எல்லோரும் என்னைப் பற்றியே பேசுகிறார்கள். அது சரியல்ல. சினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல, ஜனநாயகமும்கூட. சினிமா ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் சிறப்பாக வரும். பாபநாசம் படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த படம் 3 மொழிகளில் வெற்றிபெற்ற படம். அதை எங்கள் கையில் ஒத்திகை பார்க்க தந்திருக்கிறார்கள்.
 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதமி நடித்திருக்கிறார்...?
 
இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்தவுடன், படக்காட்சிகளை திரையிட்டு பார்த்தேன். அப்போது ஒரு நல்ல நடிகையை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. அந்தளவுக்கு கௌதமி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இதை நான் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக சொல்லவில்லை. நிஜமாகவே கௌதமி திறமையான நடிகை.
 
அடுத்தப் படத்திலும் கவுதமி நடிப்பாரா?
 
அதுபற்றி கௌதமி முடிவு செய்வார்.

பொதுவாக உச்ச நடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக உச்ச நடிகைகளைத்தானே தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் கௌதமியை தேர்ந்தெடுத்தது ஏன்?
 
என்னைப் பொறுத்தவரை கௌதமி உச்சநடிகைதான்.
உங்களை உங்கள் ரசிகர்கள் ஆழ்வார்பேட்டை ஆண்டவன் என்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கரும் கடவுள் என்கிறாரே?
 
எம்.எஸ்.பாஸ்கர் என்னை அடிக்கடி கடவுள் என்று அழைக்கிறார். நான் கடவுளே இல்லை என்று சொல்பவன். அன்பே சிவம் ரூட்டில் அவர் அப்படி சொல்கிறாரோ என்று விட்டுவைத்திருக்கிறேன்.
 
இந்த படத்தின் கதைக்களமாக திருநெல்வேலியை தேர்ந்தெடுத்தது ஏன்?
 
பாபநாசம் என்ற தலைப்பு வைத்ததால், திருநெல்வேலியை தேர்வு செய்தோம். இதில், நெல்லை தமிழ் பேசி நடித்திருக்கிறேன்.
 
நெல்லை தமிழ் பேசி நடிப்பதற்கு சுலபமாக இருந்ததா?
 
எப்படி சுலபமாக இருக்கும்? அது புது மொழி. ஆனாலும் பொது மொழி. சுருதியோடு பேச எழுத்தாளர்கள் ஜெயமோகன், சுகா ஆகிய இருவரும் கற்றுக் கொடுத்தார்கள்.
 
பாபநாசம் படம், பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டும் கதையம்சம் கொண்டது. தற்போது சமூகத்தில் அதுபோல் செல்போன்களில் படம் எடுத்து மிரட்டும் நிலை உருவாகியிருக்கிறதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
 
நீங்கள் சொல்வது, கார் வாங்கினால் கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் என்பதுபோல் இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை நல்லவைகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை என் அனுமதியில்லாமல் என்னை செல்போனில் படம் எடுப்பது அத்துமீறல். அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல்.