வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2015 (09:25 IST)

எந்த மதத்துக்கு எதிராகவும் படம் எடுக்க மாட்டேன் - கமல் பேட்டி

மே 1 உத்தம வில்லன் வெளியாகிறது. அதனை முன்னிட்டு படத்தை புரமோட் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார் கமல். உத்தம வில்லனை தடை செய்ய வேண்டும் என்ற மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த உற்சாகம் படக்குழுவிடம் பிரதிபலிக்கிறது. இந்நிலையில் கமல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 

 
உங்கள் படங்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை சந்திக்கிறதே?
 
சினிமா எடுப்பது எளிது. ஆனால், அதனை வெளியிடுவது கஷ்டமாக உள்ளது. எனது படங்களுக்கு சிலர் தேவையில்லாமல் பிரச்சனை செய்து வருகிறார்கள். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இதுபோன்று செய்வது சரியல்ல. 
 
நீங்கள் இந்துக்களுக்கு எதிரான படங்கள் எடுப்பதாக ஒருசாரார் கூறுகிறார்களே?
 
நான் யாருக்கும் எதிரான படங்களை எடுக்கவில்லை. இங்கு இந்துக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான படங்கள் எடுக்க முடியுமா?
அதேபோல் முஸ்லீம், ஜெயின் உள்ளிட்ட எந்த மதத்துக்கு எதிரான படமும் எடுக்க மாட்டேன். இந்து, முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் என்னுடைய சகோதரர்கள், ஒரு குடும்ப உறுப்பினர்கள். எனவே எந்த மதத்துக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் எதிரான படங்களை எடுக்க மாட்டேன்.
 
உத்தம வில்லனுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டதே?
 
அந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. 
 
ஏன் இதுபோன்ற எதிர்ப்பு உங்கள் படங்களுக்கு என்றில்லை, பொதுவாகவே சினிமாவுக்கு எதிராக கிளம்புகின்றது?
 
என்னுடைய படங்களை எதிர்ப்பவர்கள் சிலர்தான். தொடர்ந்து என் படங்களை ஏன் எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை. நடிகை, நடிகையர் உள்ளிட்ட கலைஞர்கள் சிறுபான்மையினர். அவர்களை வேதனைப்படுத்தாதீர்கள்.

உங்கள் படங்களுக்கு கிளம்பும் எதிர்ப்புகள் ரசிகர்களையும் கவலைப்பட வைத்துள்ளதே?
 
என் ரசிகர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், இதுபோன்ற எதிர்ப்புகளை கண்டு கோபப்படவோ வருத்தப்படவோ கூடாது. அவரவர் வேலையை அவரவர் செய்து கொண்டு இருங்கள்.
 

 
உத்தம வில்லன் என்ன கதை?
 
ஒரு நடிகனின் வாழ்க்கையே இப்படத்தின் கதை. இதில் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். எனக்கு முக்கியமான படம் இது. ஒரு குரூப் நடன காட்சி வித்தியாசமாக படமாக்கப்பட்டு உள்ளது. ஹாலிவுட் சினிமாவின் தெளிவு இப்படத்தில் இருக்கும்.
 
உத்தமவில்லனில் பாலசந்தர் நடித்து இருப்பது பற்றி?
 
பாலசந்தர் என் குருநாதர். அவர் இயக்கத்தில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறேன். அவரும் டைரக்டர் கே.விஸ்வநாத்தும் இந்த படத்தில் நடித்து உள்ளனர். இது பெருமையாக இருக்கிறது. இரு இயக்குனர்களும் ஆராதனைக்கு உரியவர்கள்.
 
அறுபது வயதிலும் இளமையாக இருக்கிறீர்களே?
 
மனதுதான் காரணம். வயது என்பது உடம்புக்குதான். மனதுக்கு அல்ல.