1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 21 மார்ச் 2015 (10:30 IST)

ஹாலிவுட்காரர்கள் நம் கதைகளை திருடுகிறார்கள் - கமல் பேட்டி

ஏப்ரல் 10 உத்தம வில்லன் வெளியாகிறது. நான் நடித்த 500 படங்களையும் மறந்துவிடுவேன், ஆனால் உத்தம வில்லனை மறக்க முடியாது என்று நாசர் பேசியிருக்கிறார். இப்படி படம் சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்கும் பில்டப்பில் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்குநாள் பலூனாக ஊதிப் பெரிதாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு கமல் பேட்டியளித்தார். பிறமொழிப் படங்களை காப்பி செய்து அதிக படங்களை எடுத்தவர் என்ற குற்றச்சாட்டு கமலுக்கு உண்டு. அவரே காப்பி விஷயத்தில் ஹாலிவுட்காரர்களை சாடுகிறார். இனி பேட்டி...
உங்கள் படங்கள் அதிக நாள்கள் அண்டர் புரொடக்ஷனில் உள்ளதே...?
 
அப்படியெல்லாம் இல்லை. விஸ்வரூபம் படத்தை ஆறு மாதத்தில் முடித்தேன். சில பிரச்சினைகளால் அது தாமதம் ஆனது. விஸ்வரூபம்–2 படத்தை மூன்று மாதத்தில் முடித்தேன். தயாரிப்பு தரப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. உத்தமவில்லன், பாபநாசம் படங்களும் முடிந்துள்ளது.
 
ஒரே நேரத்தில் பல படங்களில் பல வேடங்களில் நடிப்பது சிரமமாக இல்லையா?
 
அப்படி நடிப்பது எனக்கு புதிதல்ல. மரோசரித்திரா, மன்மதலீலை படங்களில் ஒரே நேரத்தில்தான் நடித்தேன்.
 
உத்தம வில்லன் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியதற்கான காரணம்...?
 
ரமேஷ் அரவிந்தும் நானும் ஒரேவிதமான எண்ண ஓட்டத்தை உடையவர்கள். அதனால்தான் உத்தம வில்லனை அவர் இயக்கினார். தவிர, நடிப்பு இயக்கம் இரண்டையும் ஒரே நேரத்தில் கவனிப்பது சிரமம். உத்தம வில்லனில் மேக்கப்புக்கும் அதிக நேரம் ஒதுக்க வேண்டி வந்தது.

பாலசந்தர் உத்தம வில்லனில் நடித்திருப்பது பற்றி...?
 
பாலச்சந்தர் நடித்ததால் உத்தமவில்லன் படத்தை என்னுடைய சொத்தை போல் கருதுகிறேன். நடிகன் என்ற வாழ்க்கையே அவர் கொடுத்ததுதான். பாலசந்தர் இல்லாவிட்டால் நான் நடிகனாகி இருக்க மாட்டேன். உதவி இயக்குனராகவோ, டான்ஸ்மாஸ்டராவோ இருந்து இருப்பேன்.
உங்களை கவர்ந்த தெலுங்கு நடிகர்கள் யார்...?
 
என்டி.ராமராவ், நாகேஸ்வரராவ் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரிடமிருந்தும் நான் நிறைய கற்றிருக்கிறேன். ஒருமுறை ஊட்டியில் ஒரு படப்பிடிப்புக்காக ஹேnட்டலில் தங்கியிருந்தேன். அதிகாலை நான்கு மணிக்கு பக்கத்து அறையில் சத்தம் கேட்டது. போய் பார்த்தால் என்.டி.ராமராவ் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். எஸ்.வி.ரங்காராவ் எனக்குப் பிடித்தமான நடிகர்.
 
அவரைப் பற்றி...?
 
எஸ்.வி.ரங்காராவ் மாதிரி ஒரு நடிகர் அவருக்குப் பிறகு வரவில்லை. அவர் மாதிரி நடிகர்கள் வராதது வேதனையளிக்கிறது. எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ் மாதிரி ஆயிரம் பேர் உருவாக வேண்டும்.
 
ஹாலிவுட் சினிமா பற்றி உங்கள் அபிப்பிராயம்...?
 
ஹாலிவுட்காரர்கள் நம் கதைகளை திருடுகிறார்கள். தெலுங்கில் நான் நடித்த சுவாதி முத்யம் படத்தின் கதையைப் போல் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஹாலிவுட்டில் பாரஸ்ட் ஹம்ப் என்ற படம் வந்தது. அவர்கள் மீது நாம் வழக்குதான் போட வேண்டும்.