வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Suresh
Last Updated : சனி, 9 ஜனவரி 2016 (14:40 IST)

நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நங்க உறுப்பினர்களின் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக உள்ளனர்.


 

 
இது குறித்து சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
 
"நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து சுமார் 90 நாட்கள் ஆகிவிட்டது. வந்த தேதியில் இருந்து இந்த 90 நாட்களும் நாங்கள் சரியான அளவில் நிறைய வேலைகள் பார்த்துள்ளோம்.
 
பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து அலுவலகம் சார்ந்த நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளை முதலில் சீர் செய்துள்ளோம்.
 
சென்னையில் திரைப்படங்களையே நம்பி வாழ்கின்ற துணை நடிகர்கள் வேலை செய்ததற்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. அதை வாங்கி கொடுத்துள்ளோம்.
 
நாங்கள் பொறுப்புக்கு வந்து இதுவரை மூன்று செயற்குழு நடத்தியுள்ளோம். ஒன்று மாதாந்திர செயற்குழு, மற்றொன்று சிறப்பு செயற்குழு. மூன்று செயற்குழுவிலும் அனைத்தும் முறைப்படி விவாதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
 
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள உறுப்பினர்கள் 2,500 பேருக்கு தீபாவளி பரிசு பொருட்களை நாங்கள் அனுப்பி வைத்தோம்.
 
மழையின் தொடர்ச்சியாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்து சென்னை பாதிக்கப்பட்டது. கடலூர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. 
 
அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து தொடர்ந்து 15 நாள் நிவாரண பணியில் நடிகர் சங்கம் ஈடுபட்டது.
 
அது முடிவடைந்தவுடன் தற்போது நிர்வாகத்தினுடைய தேவைகள் என்ன என ஆராய்ந்து இடைவேளை ஏதும் இல்லாமல் நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய குருதட்சணை திட்டம் எனப்படும் திட்டத்தை நடை முறைக்கு கொண்டு வந்துள்ளோம்.
 
எந்த திட்டம் தொடங்கினாலும் முதலில் ஒழுங்குபடுத்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களைப் பற்றிய விவரம் தேவை. 
 
பல வழிகளில் கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் குருதட்சணை திட்டம் என்று பெயர் வைத்தோம்.
 
இந்த ஜனவரி இறுதிக்குள் அனைத்து கலைஞர்களின் குடும்ப கணக்கெடுப்பு எடுத்து முடிக்கப்படும்.
 
இந்த கணக்கெடுப்பு நிர்வாகங்களின் மூலம் திட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டு கல்வி, மருத்துவம் என எல்லா அவசர கால உதவிக்கும் பயன்படுத்தப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.