1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2015 (05:51 IST)

கோட்டாபயவை நான்கு வழக்குகளில் மட்டுமே கைது செய்யத்தடை: உச்சநீதிமன்றம்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை குறிப்பிட்ட நான்கு வழக்குகளில் மட்டுமே கைது செய்யத்தடை என்றும் அவை தவிர மற்ற வழக்குகளில் அவரைக் கைது செய்வதற்கு தடை இல்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

நாட்டின் காவல்துறை தலைவர், குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடிகள் குறித்து ஆராயும் காவல்துறையின் பிரிவுகள் ஆகியவை மட்டுமே அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தன்னைக்கைது செய்யக்கூடாது என அவர் சமர்பித்த மனுவை ஆராய்ந்த உச்சநீதிமன்றம், அவரைக் கைது செய்வதற்கு தடை விதித்திருந்தது. இதன் காரணமாக அவர் மீதான வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரை கைது செய்ய முடியுமா எனும் கேள்விகள் எழுந்திருந்தன.

அதைத் தெளிவுபடுத்துமாறு கோரி சட்டமா அதிபர் சிறப்பு மனுவொன்றை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தார்.

மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு பொலிஸ் மாஅதிபர், குற்றப்புலனாய்வுத்துறை, நிதிமோசடிகளை ஆராயும் சிறப்பு காவல்துறை பிரிவு ஆகியோரால் மட்டுமே அவரைக் கைது செய்ய முடியாது என தெளிவுபடுத்தினர்.

இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை வாங்கியது, மற்றும் சிறிய ரக விமான சேவையான மிஹின் லங்கா நிறுவனத்துக்கு விமானங்கள் வாங்கியயபோது ஏற்பட்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பானக் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக மட்டும் அவரைக் கைது செய்ய முடியாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அதே நேரம் ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற ஏனைய விசாரணைக் குழுக்களால் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு தடை ஏதுமில்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.