வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. விளையாட்டு
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (11:44 IST)

மைக் ஹஸ்சியிடமிருந்து சீரான பேட்டிங்கை கற்றுக் கொள்வேன் -ரோகித் சர்மா

நெருக்கடிகளை சமாளித்து தொடர்ச்சியாக ரன் குவிப்பது எப்படி என்ற யுக்தியை மைக் ஹஸ்சியிடம் இருந்து கற்றக் கொள்ள விரும்புவதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந்தேதி அபுதாபியில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 
பட்டத்தை தக்க வைத்துக் கொள்வதில் தீவிர முனைப்பு காட்டி வரும் மும்பை அணியில் கடந்த ஆண்டு விளையாடிய சச்சின் தெண்டுல்கர், ரிக்கிபாண்டிங் ஓய்வு பெற்று விட்டனர். புதிய ஏலத்தில் மிட்செல் ஜான்சன், வெய்ன் சுமித் இடம் மாறி விட்டனர். ஆனாலும் மைக் ஹஸ்சியின் வருகை மும்பை அணிக்கு பலம் சேர்க்கும். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரன் மழை பொழிந்த ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்சியை ரூ.5 கோடிக்கு மும்பை அணி வாங்கி இருக்கிறது.

புதிய அணி தொடர்பாக மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா அளித்த பேட்டியில், ‘ஜான்சன், வெய்ன் சுமித்தை தவிர்த்து மற்றபடி கடந்த சீசனில் விளையாடிய மும்பை அணி ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இப்போதும் இருக்கிறது. மிட்செல் ஜான்சனை ‘மேட்ச் கார்டு’ சலுகை மூலம் தக்க வைக்க விரும்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. 
இருப்பினும் முக்கியமான வீரர்கள் அப்படியே எங்கள் அணியில் தொடருகிறார்கள். கூடுதலாக மைக் ஹஸ்சி எங்களிடம் வந்து உள்ளார். இதே போல் ஜாகீர்கான் நிறைய அனுபவம் வாய்ந்தவர். அது அணிக்கு கைகொடுக்கும். எனவே சரியான கலவையில் அணியை தேர்வு செய்து களம் இறங்குவது மிகவும் முக்கியம். மைக் ஹஸ்சி, தொடர்ந்து சீராக ரன் குவிப்பதில் வல்லவர். நெருக்கடிகளை சமாளித்து எப்படி அவர் சீராக ரன் குவிக்கிறார் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என்றார்.
 
மேலும் ரோகித் ஷர்மா கூறும் போது, ‘ஐ.பி.எல். ஏலத்திற்கு பிறகு அணிகளில் மாற்றமாக பல புது வீரர்கள் சேர்ந்துள்ளனர். அணியில் புதிதாக இணைந்துள்ள வீரர்கள் முழுஉத்வேகத்தில் ஒருங்கிணைந்து விளையாடுவது சவாலான விஷயமாக இருக்கும். வீரர்களின் அறையில் நேர்மறை எண்ணமும், நட்புறவான சூழலும் நிலவுவது அவசியம். அப்படி இருந்தால் அது களத்திலும் எதிரொலிக்கும். எது சரியான 11 பேர் கொண்ட கூட்டணி என்பதை தேர்வு செய்வதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். அடுத்த இரு மாதத்திற்கு இது தான் சவாலான காரியம்’ என்றும் தெரிவித்தார்.