வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. விளையாட்டு
  4. »
  5. செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: ஞாயிறு, 11 மே 2014 (17:28 IST)

மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி: ரபேல் நடால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றின் முதல் அரை இறுதிப் போட்டி நேற்று அங்கு நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடாலும் சக நாட்டவரான ரொபர்டோ பாடிஸ்டா அகட்டும் மோதினர். இதில் 6 - 4, 6 - 3 என்ற நேர் செட்களில் வென்று ரபேல் நடால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். 
 
ஒரு மணி 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டத்திலேயே அகட்டின் சர்வீசை நடால் தடுத்தபோதும் அவரது துல்லியமற்ற சர்வீசினால் போட்டி 3 - 3 என்ற சமநிலை பெற்றது. ஆனால், அதன்பின்னர் தொடர்ந்து ஏழு புள்ளிகளைப் பெற்ற நடால் இரண்டாவது ஆட்டத்திலும் ஒரு டபிள் பிரேக் புள்ளியை வென்றார். 
 
அதன்பின்னர் சிறிது நேரம் அகட் தாக்குப் பிடித்தபோதும் தொடர்ந்து இரண்டு புள்ளிகளைப் பெற்றதன்மூலம் அடுத்த செட்டையும் நடால் தனதாக்கினார். 13 முறை பட்டம் வென்றுள்ள நடால் கடந்த வாரங்களில் நடைபெற்ற மாண்டிகார்லோ மாஸ்டர்ஸ், பார்சிலோனா ஓபன் கால் இறுதிப் போட்டிகளில் எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவினார். 
 
இப்போது நடைபெறும் இந்தப் போட்டியில் தொடர்ந்து 12ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள நடால் இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவாரேயானால் இந்த சீசனுக்கான ஐரோப்பிய களிமண் தரைப் போட்டிகளில் அவர் பெறும் முதல் வெற்றி இதுவாக இருக்கும்.