வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (19:46 IST)

டி 20 கிரிக்கெட் : ஜிம்பாப்வேவை பழி தீர்த்தது இந்தியா

இன்று நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இந்தியா தோற்கடித்து, கடந்த ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. 


 

 
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய தோற்ற நிலையில், ஹரேரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிபாபா மற்றும் மசகட்ஸா இருவரும் தலா 10 ரன்கள் எடுத்து சரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சிக்கந்தர் ரஸா 1 ரன்னிலும், முடோம்போட்சி ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். இதனால், 28 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
 
பின்னர் பீட்டர் மோர் மற்றும் மால்கம் வால்லர் இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை மெதுவாக உயர்த்தினர். வால்லர் 14 ரன்னிலும், மோர் 31 ரன்னிலும் வெளியேறினர். இருவரும் இணைந்து 29 ரன்கள் குவித்தனர்.
 
பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் சரண் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
100 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 13.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. துவக்க ஆட்டகாரர்களாக களம் இறங்கிய கே.எல்.ராகுல் 47 ரன்களும், மந்தீப் சிங்கும் 52 ரன்களும் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தார்கள்.