செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (10:59 IST)

டெஸ்ட் விளையாடிய தோனி; வள்ளலாக மாறிய உமேஷ் யாதவ் – தோல்வியின் 2 காரணங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய முதல் டி 20 போட்டியில் இந்தியா கடைசிப் பந்தில் வெற்றி வாய்ப்பை இழந்து தோல்வியைத் தழுவியது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தபோது இன்னிங்ஸின் பாதிநேரத்தில் 80 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது. பின்னால் தோனி, தினேஷ் கார்த்தி, குருனால் பாண்ட்யா போன்ற அதிரடி ஆட்டக்காரர்களும் களத்தில் ராகுல் நல்ல பார்மிலும் விளையாடிக் கொண்டிருந்ததால் இந்தியா 180 ரன்களை இலக்காக நிர்ணயிக்கக் கூடும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர்.

ஆனால் அதன் பிறகு நடந்தததெல்லாம் ஏமாற்றமே. கடைசி 10 ஓவர்களில் இந்தியா சேர்த்தது வெறும் 46 ரன்களே. இத்தனைக்கும் இந்திய இன்னிங்ஸ் முடியும் போது தோனிக் களத்தில் அவுட் ஆகாமல் இருந்தார். மற்ற வீரர்கள் எல்லோரும் உடனடியாக தங்கள் விக்கெட்களைப் பறிகொடுத்ததால் நிதானமாக விளையாடிய தோனி கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை தோனியால் பவுண்டரிகள் விளாசமுடியவில்லை. மொத்தமாக 37 பந்துகளை சந்தித்த தோனி 29 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இந்திய அணியின் தோல்விக்கு தோனியின் இந்த மந்தமான இன்னிங்ஸும் முக்கியக் காரணமாக மாறியது.

இதையடுத்து குறைந்த ரன்களை வைத்து டிபண்ட் செய்த இந்திய அணியில் பவுலர்கள் சிறப்பாகப் பந்து வீசி ரன்களைக் கட்டுப்படுத்தினர். கடைசி ஓவரில் வெற்றிக்குத் 14 ரன்கள் தேவையாக இருந்தது. களத்தில் இருந்தவர்கள் இருவருமே பவுலர்கள் என்பதால் இந்தியாவிற்கே வெற்றி கிட்டும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரை வீசிய உமேஷ் யாதவ் 2 பவுண்டரிகள் உள்பட 14 ரன்களையும் கொடுத்து இந்தியாவின் கைகளில் இருந்த வெற்றியைத் தள்ளிவிட்டார். இந்தியாவின் தோல்விக்கு இந்தக் கடைசி ஓவரும் முக்கியக் காரணமானது.

பெஸ்ட் பினிஷர் என ரசிகர்களால் அழைக்கப்படும் தோனியின் கடைசி நேர சொதப்பலும் உமேஷ் யாதவ்வின் கடைசி ஓவர் வள்ளல் தன்மையும் இந்தியாவை மற்றுமொரு கடைசி பந்து த்ரில்லரில் தோல்வியைத் தழுவச் செய்துவிட்டது. இதனால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தோனி மற்றும் உமேஷ் யாதவ் மீது விமர்சனங்களை வைத்துள்ளனர்.