செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Bharathi
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2015 (08:48 IST)

​குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு விதிக்கப்பட்ட தடை நாளையுடன் முடிவு

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு சர்வதேச குத்துச் சண்டை சங்கம் விதித்த ஒரு ஆண்டு தடை காலம் நாளையோடு முடிவடைகிறது.


 
 
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சரிதா தேவி. குத்துச் சண்டை வீராங்கனையான சரிதா கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தென்கொரியாவின் இஞ்சியான் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில், 60 கிலோ பிரிவில் கலந்து கொண்டார். இதில், அரையிறுதி போட்டியில் கொரிய வீராங்கனையிடம் சொற்ப புள்ளிகளின் அடிப்படையில் தோல்வியடைந்தார்.
 
சரிதா தேவி சிறப்பாக செயல்பட்டபோதிலும் தோல்வியடைந்ததாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. 
இதனால் வேதனையடைந்த சரிதா தேவி, பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது, தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை, கொரிய வீராங்கனையின் கழுத்திலேயே போட்டார். இதனால் பரிசளிப்பு மேடையில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. சரிதாவின் இந்த நடவடிக்கை, சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறப்பட்டது.
 
இதனை தொடர்ந்து சரிதாவுக்கு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க ஒரு ஆண்டுக்கு தடை விதிப்பதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவித்தது.
 
இது குறித்து சரிதா கூறுகையில் , "குத்துச் சண்டை போட்டியில் இப்போது தான் நான் முன்னேறியுள்ளதாக கருதுகிறேன். குத்துச்சண்டையில் முன்னேற்றை வளர்த்துக் கொள்ள இந்த ஒரு ஆண்டுகாலம் பயன்பட்டுள்ளதாக கருதுகிறேன். மனதளவிலும், உடல் அளவிலும் முன்பை விட தற்போது சிறப்பாக உள்ளேன். இவ்வாறு சரிதா தேவி கூறினார்.