1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (12:05 IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி: சாதனை படைத்த அபினவ் பிந்த்ரா, சவுரவ் கோசல்

17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா வெண்கல பதக்கமும், ஸ்குவாஷ் பிரிவில் சவுரவ் கோசல் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். 
 
ஆசிய விளையாட்டுப் போட்டி தென்கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 1 தங்கம், 5 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்று இருந்தது.
 
இந்நிலையில், செப் 23 ( இன்று ) இந்தியாவுக்கு மேலும் 2 வெண்கல பதக்கம் துப்பாக்கி சுடும் போட்டியில் கிடைத்துள்ளது. 31 வயதான அபினவ் பிந்த்ரா செப் 23 (இன்றுடன்) ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். மேலும் அபினவ் பிந்த்ரா, தனது கடைசி போட்டியில் வெண்கல பதக்கம் வென்று முத்திரை பதித்துள்ளார்.
 
மேலும் அணிகள் பிரிவிலும் அவர் வெண்கல பதக்கம் வென்றார். அபினவ் பிந்த்ரா, ரவிக்குமார், சஞ்சீவ் ராஜபுத் அடங்கிய இந்திய அணி 10 மீட்டர் ஏர்ரைபிள் அணிகள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், குவைத்தின் அப்துல்லாவை நேருக்கு நேர் மோதினார். முதலிரண்டு செட்டை 12–10, 11–2 என கைப்பற்றிய கோசல், மூன்றாவது செட்டை 12–14 என இழந்தார். கடைசி இரண்டு செட்டிலும் சொதப்பிய கோசல் 8–11, 8–11 என பறிகொடுத்தார். முடிவில் கோசல் 12–10, 11–2, 12–14, 8–11, 8–11 என தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 
இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை கோசல் படைத்துள்ளார்.