வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 7 ஜூலை 2014 (20:09 IST)

டென்னிஸ் தரவரிசை மகளிர் இரட்டையர் பிரிவில் 5 ஆவது இடத்தில் சானியா மிர்சா

சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 5 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மணிக்கட்டு காயத்தில் இருந்து மீண்டு சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் சானியா, தற்போது தனது வாழ்நாளில் சிறந்த தரநிலையை எட்டியிருக்கிறார். 
 
விம்பிள்டன் போட்டியில் சானியா மிர்சா-கேரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி குறிப்பிடத்தக்க வகையில் விளையாடவில்லை. எனினும், 2 ஆம் சுற்றுக்கு முன்னேறியதால் சானியாவுக்கு 130 தரநிலைப் புள்ளிகள் கிடைத்தன. இதனால், அவர் தரவரிசையில் டாப்- 5 இடத்தைப் பிடித்துள்ளார். 
 
காயத்திற்கு 3 ஆவது முறையாக அறுவை சிகிச்சை செய்த பின்னர் நீண்ட பயணத்திற்குப் பிறகு தரவரிசையில் சிறந்த நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சானியா தெரிவித்தார். சானியா எப்படியும் டாப்- 5 இடத்தை பிடிப்பார் என்று எப்போதும் நம்பியதாக அவரது தந்தையும் பயிற்சியாளருமான இம்ரான் மிர்சா கூறினார். 
 
மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா சிறந்த இந்திய வீராங்கனையாக விளங்குகிறார். இவர் சர்வதேச தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி தற்போது 285 ஆவது இடத்தில் இருக்கிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன் 10 இடங்கள் பின்தங்கி 135 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 
 
ஆடவர் இரட்டையிர் பிரிவில் லியாண்டர் பயசின் தரநிலையில் (13 ஆவது இடம்) மாற்றமில்லை. ரோகன் போபண்ணா 3 இடங்கள் பின்தங்கி 20 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.