இந்தியா படுதோல்வி: ஆறுதல் தந்த ஹர்திக் பாண்டியா!

இந்தியா படுதோல்வி: ஆறுதல் தந்த ஹர்திக் பாண்டியா!


Caston| Last Modified ஞாயிறு, 18 ஜூன் 2017 (21:24 IST)
இந்தியா பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வியடைந்தது. பாகிஸ்தான் ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை நாலா புறமும் பறக்க விட்டனர். அந்த அணி 50 ஓவர் முடிவில் 338 ரன் குவித்து இந்தியாவுக்கு 339 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது.
 
இதனையடுத்து கடினமான இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்ட ஒருவர் பின் ஒருவராக முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் நடையை கட்டினர்.
 
இந்தியாவின் பேட்டிங் வரிசையை ஒட்டுமொத்தமாக சீர் குலைத்தார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அமிர். கேப்டன் விராட் கோலி, தவான், யுவராஜ் சிங், தோனி, ஜாதவ் என அடுத்தடுத்து ரோகித் ஷர்மாவை தொடர்ந்து அவுட் ஆகினர்.
 
இந்திய அணி 17 ஓவரில் 72 ரன்னில் 6 விக்கெட்டை இழந்து திணறியது. இதனையடுத்து 7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியாவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சற்று ஆறுதல் அளிக்கும் விதத்தில் ஆடியது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி இந்திய ரசிகர்களின் கடைசி நம்பிக்கையாக ஒரு ஓரத்தில் திகழ்ந்தார்.
 
ஹர்திக் பாண்டியா களத்தில் நிற்கும் வரை சிக்ஸர்களும், பவுண்டரிகளுமான பறக்கவிட்டார். ஆனால் அவர் 43 பந்துக்கு 76 ரன் எடுத்த போது ஜடேஜா செய்த தவறால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 6 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசினார்.
 
இதனையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில் இந்தியா 30.3 ஓவர்களில் 158 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 180 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் தரப்பில் அமிர் மற்றும் ஹசன் அலி ஆகியோர் 3 விக்கெட்டையும், ஷதப் கான் 2 விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவை நிலைகுலைய வைத்தனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :