வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2014 (10:20 IST)

மனோஜ் குமாருக்கு அர்ஜூனா விருது: மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்

அர்ஜூனா விருது பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாருக்கு விருது வழங்க மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

விளையாட்டுத் துறையில் உள்ள மதிப்புமிக்க விருதுகளுள் ஒன்றாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. இதில் 2014 ஆம் ஆண்டிற்கான விருதுப் பட்டியலில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

2010 ஆம் ஆண்டு காமன்வெல்த்தில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரர் மனோஜ் குமாரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் பரிந்துரை செய்யப்படவில்லை.

இந்நிலையில், விருது குழுவினர் தன்னைப் புறக்கணித்து விட்டதாக, மனோஜ்குமார் குற்றம் சாட்றினார். மனோஜ் குமார் ஊக்க மருந்தில் சிக்கியவர் என்று தவறாகக் கருதிய தேர்வு கமிட்டி, மனோஜ் குமாரின் பெயரை விருதுப் பட்டியலில் இறுதி வரை சேர்க்கவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த மனோஜ் குமார், அர்ஜூனா விருது கமிட்டியின் முடிவைக் கண்டித்தும், இந்திய விளையாட்டு அமைச்சகத்தை எதிர்த்தும், வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது விளையாட்டு அமைச்சகம் சார்பில் ஆஜரான வக்கீல் சஞ்சய் ஜெயின், தேர்வு கமிட்டியினர் மனோஜ் குமார் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியவர் என்று தவறுதலாக நினைத்து புறக்கணித்து விட்டனர் என்பதை ஒப்புக்கொண்டார். மேலும், விருதுக்கு மனோஜ் குமாரின் பெயர் பரிசீலிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.

இந்நிலையில் மத்திய விளையாட்டு அமைச்சகம், மனோஜ் குமாருக்கு அர்ஜூனா விருது வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மனோஜ்குமார் கூறுகையில், ‘எனக்கு அர்ஜூனா விருது வழங்க முடிவு செய்து இருக்கும் தகவலை என் சகோதரரிடம் மத்திய விளையாட்டு அமைச்சக இணைசெயலாளர் கூரியுள்ளார். இதனால் என் முடிவு சரியானதே என்று நிரூபனம் ஆகியுள்ளது‘ என்றார்.