வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2016 (12:30 IST)

பிசிசிஐ வங்கி கணக்கு முடக்கம்: பின்னணி என்ன??

கிரிக்கெட் வாரியத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து பண பரிவர்த்தனையை முற்றிலுமாக முடக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு லோதா கமிட்டி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகளை மாற்றமின்றி அமல்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
 
ஆனால் லோதா கமிட்டியின் சிபாரிசுகளை அமல்படுத்தாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் காலம் தாழ்த்தி வந்ததை அடுத்து லோதா கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. 
 
சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவுக்கு பிறகு நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சில பரிந்துரைகளை ஏற்பதாகவும், பல சிபாரிசுகளுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவற்றை ஏற்க முடியாது என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், நிர்வாக சீர்திருத்தத்துக்கான பரிந்துரைகளை அமல் செய்யாமல் இழுத்தடித்து வருவதால், கிரிக்கெட் வாரியத்தின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு லோதா கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
இதனால் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான தொடர் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அதேபோல், லோதா கமிட்டி சிபாரிசுகளை அப்படியே அமல்படுத்தினால் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்திய அணி புறக்கணிக்க நேரிடலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.