1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Annakannan
Last Updated : வியாழன், 18 செப்டம்பர் 2014 (13:57 IST)

பரபரப்பான ஆட்டத்தில், சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா

சாம்பியன்ஸ் லீக்கில் 2014 செப்டம்பர் 17 அன்று ஐதராபாத்தில் நடந்த 20 ஓவர் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.
 
பூவா, தலையாவில் வென்ற கொல்கத்தா, சென்னை அணியை மட்டை பிடிக்க அழைத்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை, 20 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. ரெய்னா, பிராவோ ஆகியோர் தலா 28 ஓட்டங்கள் எடுக்க, மெக்கல்லம் 22 ஓட்டங்கள் எடுத்தார். கேப்டன் தோனி, 20 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்தார். இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் இமாலய சிக்ஸர் அடித்து, ரசிகர்களை மகிழ்வித்தார்.
 
அடுத்து ஆடிய கொல்கத்தா, தொடக்கத்தில் தடுமாறியது. 10 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, பின்னர் சமாளித்து ஆடியது. அந்த அணியின் ஆந்த்ரே அசல், 25 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் சேர்த்து, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 
 
அவருடன் இணைந்து ஆடிய ரயான் டென் டஸ்காத், தன் பங்குக்கு 41 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் கொல்கத்தா, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுக்க, அந்த அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
ஆஷிஷ் நெஹ்ரா, 21 ரன்கள் மட்டுமே கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 
அதிரடியாக ஆடிய ஆந்த்ரே அசல், ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.