வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. விளையாட்டு
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 24 ஏப்ரல் 2014 (11:29 IST)

சென்னை அணிக்கு 2வது வெற்றி! குறைந்த இலக்கிலும் ராஜஸ்தான் தோல்வி!

ஐபிஎல். கிரிக்கெட் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை நிர்ணயித்த குறைந்த இலக்கையும் எடுக்க முடியாமல் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. ரவீந்தர் ஜடேஜா ஆல் ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தினார்.
டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வாட்சன் முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். இதன்படி பிரன்டன் மெக்கல்லத்துடன் இணைந்து வெய்ன் சுமித் பவுண்டரியுடன் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கி வைத்தார். 
 
ஓரளவு நல்ல தொடக்கம் தந்த இந்த ஜோடி 6–வது ஓவரின் 2–வது பந்தில் பிரிந்தது. ஜேம்ஸ் ஃபாக்னரின் பந்து வீச்சை பிரன்டன் மெக்கல்லம் (6 ரன், 10 பந்து) தூக்கியடித்த போது அதை பிடிக்க அபிஷேக் நாயர், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்டீவன் ஸ்மித் மூவரும் ஓடி வந்தனர். பொதுவாக 3 பேர் ஓடி வந்தால் பந்து நடுவில் 'தொப்பென்று' விழுவதுதான் வழக்கம். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் அசத்தலாக இந்த முறை பிடித்து விட்டார். 
 
அடுத்து சுரேஷ் ரெய்னா களம் இறங்கினார்.

அதே ஓவரின் எஞ்சிய 4 பந்துகளையும் வெய்ன் சுமித் பவுண்டரியாக்கி அசத்தினார். 6 ஓவர்களில் சென்னை அணி 51 ரன்களை தொட்டது. ஸ்டூவர்ட் பின்னியின் ஓவரில் சிக்சர் அடித்து அரைசதத்தை கடந்த சுமித் (50 ரன், 28 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) அதற்கு அடுத்த பந்தில் கேட்ச் ஆனார்.
கிடைத்த நல்ல தொடக்கத்தை பயன்படுத்த தவறிய மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் ஷாட் தேர்வில் சொதப்பி பிடியை விட்டனர்.
 
ரெய்னா 4 ரன்னில்(9 பந்து) நடையை கட்டினார்.
 
பின்னர் ஜோடி சேர்ந்த பாப் டு பிளிஸ்சிஸ், கேப்டன் டோனி ஜோடியும் நிலைக்கவில்லை. டோனி, நேர் எதிராக அடித்த பந்தை பவுலிங் செய்த ரஜத் பாட்டியா கையால் தட்டிவிட அது எதிர்முனை ஸ்டம்பை தாக்கியது. அப்போது எதிர்முனையில் டு பிளிஸ்சிஸ் (7 ரன்) கிரீசை விட்டு வெளியே நின்றதால் பரிதாபமாக ரன்–அவுட் ஆனார். தோனியும் (5 ரன், 8 பந்து) விக்கெட்டை எளிதாக பறிகொடுத்து விட்டு பெவிலியன் திரும்பினார். 74 ரன்னுக்குள் (11.1 ஓவர்) 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 'டர்' ஆகிவிடும் என்றே தோன்றியது.

இதன் பின்னர் 7–வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜாவும், அஸ்வினும் கைகோர்த்து இறுதிவரை தாக்குப்பிடித்து களத்தில் நின்றனர். ஆனாலும் ஆட்டம் ஒன்றும் பெரிதாக இல்லை. 6 ஓவர்களில் 2 பவுண்டரிகள் மட்டுமே வந்தது.
 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது.
 
ரவீந்திர ஜடேஜா 36 ரன்களுடனும் (33 பந்து, 2 பவுண்டரி), அஸ்வின் 9 ரன்னுடனும் (13 பந்து, ஒரு பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார்கள். ராஜஸ்தான் தரப்பில் ரஜத் பாட்டியா 2 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பின்னி, பிரவின் தாம்பே, ஜேம்ஸ் பவுல்க்னெர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். சென்னை அணிக்கு எக்ஸ்டிரா வகையில் 11 வைடு உள்பட 13 ரன்கள் கிடைத்தது.
 
தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் அபிஷேக் நாயர் ரன் அவுட் ஆக, சுழற்பந்தின் ஆதிக்கம் தலைதூக்கியது.
 
ரஹானே (15 ரன்), கேப்டன் ஷேன் வாட்சன் (7 ரன்), சஞ்சு சாம்சன் (16 ரன்), ஸ்டீவன் சுமித் (19 ரன்) ஆகியோர் சுழலுக்கு இரையானார்கள். இதற்கிடையே ஸ்டூவர்ட் பின்னியும் (8 ரன்) நீடிக்கவில்லை.

கடைசி நேரத்தில், ரஜத் பாட்டியாவும், தவால் குல்கர்னியும் சிறிது நேரம் பயமுறுத்தினர். இதில் ரஜத் பாட்டியா 23 ரன்னில் (20 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். இதையடுத்து கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. 20–வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். 

இதில் முதல் 4 பந்துகளில் 2 சிக்சர் உள்பட 15 ரன்கள் எடுக்கப்பட்டதால், பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால் 5–வது பந்தில் தாம்பே (2 ரன்) ரன்–அவுட் ஆனதால், 7 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. 

தவால் குல்கர்னி 28 ரன்களுடன் (19 பந்து, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். சென்னை தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஹில்பனாஸ், ஈஸ்வர் பாண்டே, அஸ்வின், மொகித் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
சென்னை அணி நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அடுத்த போட்டியில் சந்திக்கிறது.