1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Bharathi
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (06:43 IST)

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: முதல் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது.
 

 

 
நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணியும், நடப்பு சாம்பியன் அல்டெடிகோ டீ கொல்கத்தா அணியும் பலப்பரிட்சை நடத்தின. 
 
ஆட்டத்தின் துவக்கம் முதலே கொல்கத்தா வீரர்களின் ஆதிக்கமே ஓங்கியிருந்தது.முதல் 13-வது நிமிடத்தில் அந்த அணியின் ஹெல்டர் போஸ்டிகா அபாரமாக கோல் அடித்தார். அதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட சென்னை அணி, 31-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஜீஜி லால்பெக்குலா அசத்தலான கோலை அடித்து சமன் செய்தார்.
 
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் முன்னிலை பெறுவதற்காக தீவிரம் காட்டினர். ஆட்டம் சமனில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 70-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஹெல்டர் போஸ்டிகா கோல் அடித்தார். 76-வது நிமிடத்தில் வால்டோவும் தன் பங்குக்கு  கோல் அடிக்க, கொல்கத்தா அணி 3-1 என வலுவான முன்னிலை பெற்றது.
 
அதன்பின்னர் இரு தரப்பிலும் கோல் அடிக்கவில்லை. சென்னை அணிக்கு 89-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாகப் பயன்படுத்திய இலனோ, அபாரமாக பந்தை கோல்கம்பத்திற்குள் செலுத்தினார். அதன்பின்னர் இரு தரப்பிலும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால், 3-2 என கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. போட்டியின் சிறந்த வீரராக ஹெல்டர் போஸ்டிகா தேர்வு செய்யப்பட்டார்.