1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 28 ஜூலை 2014 (11:07 IST)

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: 6 தங்கம் உட்பட 20 பதக்கங்களை வென்றது இந்தியா

கிளாஸ்கோவில் நடைற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 6 தங்கம் உட்பட 20 பதக்கங்களை வென்றுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 77 கிலோ ஆண்கள் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதே போட்டியில் இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரரான ரவி கட்டுலு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் பளு தூக்கும் போட்டியில் மட்டும் இந்திய அணி ஒன்பதாவது பதக்கத்தை வென்றுள்ளது.

துப்பாக்கி சுடுதலில், மகளிர் டபுள் ட்ரேப் பிரிவில் ஷ்ரேயாசி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிர் டபுள் ட்ரேப் இறுதிச் சுற்றில், கடும் போட்டிக்கிடையே இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்டி கெர்வுட் 94 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்தியாவின் ஷ்ரேயாசி 92 புள்ளிகள் பெற்று வெள்ளியுடன் திருப்தி அடைந்தார். இங்கிலாந்து வீராங்கனை ரச்சேல் பரிஷ் (91 புள்ளி) வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதே பிரிவில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வீராங்கனை வர்ஷா வர்மன் 88 புள்ளிகளுடன் 5 ஆவது இடம் பிடித்தார். துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 8 ஆவது பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி இதுவரை 6 தங்கப் பதக்கங்களையும், 9 வெள்ளிப் பதக்கங்களையும், 7 வெண்கலப் பதக்கங்களையும் வென்று மொத்தம் 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடடிக்கிறது.

26 தங்கம், 21 வெள்ளி 26 வெண்கலம் என 73 பதங்கங்களுடன் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.