வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 28 ஜூலை 2014 (13:58 IST)

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த வேலூர் வீரர்

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று வேலூர் வீரர் சதீஷ்குமார் சாதனை படைத்துள்ளார்.

71 நாடுகள் கலந்து கொண்ட 20 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வருகிறன.

இதில் வேலூர் சத்துவாச்சாரி புது தெருவைச் சேர்ந்த இந்திய வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் தெய்வானை.

சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கமும் பளுதூக்கும் வீரர். இவர் 1985 முதல் 87 வரை நடந்த தேசிய பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் ஜெபல்பூரில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை சிவலிங்கத்தை ரோல்மாடலாகக் கொண்டு தானும் ஒரு பளு தூக்கும் வீரராக வரவேண்டும் என்பதில் சதீஷ்குமார் உறுதியாக இருந்தாகக் கூறப்படுகிறது.

சதீஷ் குமார் 10ஆம் வகுப்பு படித்த போது அந்த பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பளுதூக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் அவரது திறமையைக் கண்டு வியந்த உடற்பயிற்சி கூட நிர்வாகிகள் சதீஷ் குமாரை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் பயிற்சிக் கூடத்தில் சேர்த்தனர்.
அங்கிருந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். பள்ளி மாணவர்கள் அளவிலான தேசிய பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில் தென்னக ரயில்வேயில் அவருக்கு வேலை கிடைத்தது. தென்னக ரயில்வே அணி வீரராக களத்தில் இறங்கி, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றார். இதன் மூலம் இந்தியா சார்பில் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

2010 ஆம் ஆண்டு பல்கோரியாவிலும், 2011 ஆம் ஆண்டு தென் கொரியாவிலும் நடந்த ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டார். 2012 ஆம் ஆண்டு அபியாவில் நடந்த பளுதூக்கும் போட்டியிலும், 2013 ஆம் ஆண்டு நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.

இந்த சாதனையாளர் சதீஷ்குமார் காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் 149 கிலோ எடை தூக்கி தங்க பதக்கம் வென்று மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

காமன்வெல்த் போட்டிகளில் இந்த பிரிவில் 148 எடை இதுவரை தூக்கியுள்ளனர். ஆனால் சதீஷ்குமார் 149 கிலோ தூக்கி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.