வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : சனி, 19 ஜூலை 2014 (17:12 IST)

பெண் நிருபரிடம் 'அந்த மாதிரி' பேசிய கிறிஸ் கெய்ல்: சர்ச்சையில் சிக்கினார்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் பெண் நிருபரிடம் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இதனால் அவருக்கு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


 



 
 
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில், களத்திற்கு உள்ளே இருக்கையில் எதிரணி பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்பவர். களத்திற்கு வெளியேயும் அதிரடியாக கருத்துகளை தெரிவித்து, சர்ச்சையில் சிக்குவது அவருக்கு வாடிக்கை. இந்தியாவின் ஐபிஎல் போலவே, வெஸ்ட் இண்டீஸ் அணியும் கரீபியன் பிரிமியர் லீக்(சிபிஎல்) டி20 போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் கடந்த 17 ஆம் தேதி, ஆண்டிகுவா மற்றும் ஜமைக்காவின் தல்லாவா அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. போட்டிக்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தல்லாவா அணியின் கேப்டனான பிரபல வீரர் கிறிஸ் கெயில்(34) பேட்டியளித்தார்.

அப்போது, ஒரு பெண் நிருபர், பிட்ச் எப்படி உள்ளது என கருதுகிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு சிரித்தவாறே பதிலளித்த கெயில், நான் இன்னும் உன்னை தொடவே இல்லை. பிறகு பிட்ச் எப்படி இருந்தது என்று சொல்ல முடியும்? என்று கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண் நிருபரிடம், உங்க சிரிப்பு அழகாக இருக்கிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது என்றும் கெயில் கூறியதாக தெரிகிறது.
 
இந்த விவகாரம் பெண்கள் அமைப்பினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான பெண்கள் அமைப்பினர், கரீபியன் கிரிக்கெட் லீக் நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இது போன்ற பெண்களுக்கு எதிராக வரம்பு மீறிய பேச்சு தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறிய அவர்கள், தன்னுடைய கருத்துக்காக கிறிஸ் கெயில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். கெயில் கருத்துக்கு பல்வேறு பெண்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 
 
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து கரீபியன் பிரிமியர் லீக் நிர்வாகிகள் கூறுகையில், போட்டிகள் தொடர்பான நெருக்கடியில் இருந்த கிறிஸ் கெயில், பேட்டியின் போது செய்தியாளர்களிடம் உற்சாகமாக பேசி சிரித்துக்கொண்டிருந்தார். நகைச்சுவைக்காக அவர் சாதாரணமாக கூறிய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. மற்றபடி அவரது பேச்சுக்கு எந்தவிதமான தவறான உள்நோக்கமும் கிடையாது என்றனர்.