1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 3 அக்டோபர் 2014 (20:47 IST)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் நரைன் பந்துவீசத் தடை

இரண்டாம் முறையாக நடுவர்களின் புகாருக்கு ஆளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன், பந்துவீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதால், நாளை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் இறுதிபோட்டியில், அவரால் பங்குபெற முடியாது.
 
சாம்பியன்ஸ் லீக் தொடரில், கையை குறிப்பிட்ட அளவை விட அதிகமாக முழங்கையை வளைத்து பந்துவீசும் வீரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுனில் நரைனுடன்  முகமது ஹபீஸ் (லாகூர் லயன்ஸ்), அட்னன் ரசூல் (லாகூர் லயன்ஸ்) ப்ரநேலன் சுப்ரையன் (டால்பின்ஸ்) ஆகியோர் பந்துவீச்சின் மேல் புகார் செய்யப்பட்டு "வார்னிங் லிஸ்டில் " வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் சுனில் நரைன் மேல் இரண்டாம் முறையாக புகார் வந்துள்ளதால் அவர் கிரிக்கெட் விதிமுறைகள் படி உடனடியாக தடை செய்யப்படுகிறார்.
 
முதல் முறை நடுவர்கள் செய்த புகாரில்  அவர் வீசிய நான்கு ஓவர்களில் மூன்று பந்துகளில் சந்தேகம் தெரிவித்தனர். ஆனால் நேற்று ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி போட்டியில் அவர் வீசிய அனைத்து பந்துகளும் விதிமுறைகளை மீறியதாக நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் உடனடியாக தடை செய்யப்பட்டார்.
 
இந்த புகாரையடுத்து சென்னை ராமசந்திரா பல்கலைக்கழகத்திற்கு அவரை அனுப்ப கொல்கத்தா அணிக்கு அறிவுறுத்தப்படலாம். அங்கு அவரது பந்துவீச்சு சோதனை செய்யப்பட்டு அதை எவ்வாறு மாற்றலாம் என ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த தடையை எதிர்த்தும் அப்பீல் செய்யலாம். ஆனால் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அவர் விளையாட முடியாது.
 
கொல்கத்தா அணி அவரை சென்ற வருடம் ஏலத்தில் விடாமல் பெரும் தொகை கொடுத்து தக்கவைத்துக்கொண்டது. கொல்கத்தா அணியின் முக்கிய பந்துவீச்சாளர் திடீரென தடை செய்யப்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சையது அஜ்மல் இதே புகாரில் சர்வதேச போட்டிகளில் பந்துவீசத் தடை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த தடை பி.சி.சி.யை நடத்தும் போட்டிகளான ஐ.பி.எல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற படி அவர் மேற்கிந்திய தீவு அணிக்கு தொடர்ந்து ஆடலாம்.