வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2014 (13:26 IST)

மன்னிப்பு கேட்டார் குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி

இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
கடந்த மாதம் தென் கொரியவில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டியின் குறைந்த எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா தேவியும், தென் கொரிய வீராங்கனை ஜினா பார்க்கும் மோதினர். இதில் ஜினா பார்க் வெற்றியடைந்ததாக நடுவர் அறிவித்தார். 
 

 
இதனால் அதிருப்தியடைந்த சரிதா தேவி,  பதக்கம் வழங்கும் விழாவில் வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்ததுடன், அதனை கையில் வாங்கி அருகில் நின்ற ஜினா பார்க்கின் கழுத்தில் அணிவித்து தனது எதிர்ப்பை காட்டினார்.
 
சரிதா தேவியின் இந்த செயலினால், சர்வதேச குத்துச் சண்டை சங்கம் அவருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. தற்போது இந்த செயலுக்கு அவர் சர்வதேச குத்துச் சண்டை சங்கத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 
 
இது குறித்து அவர் கூறுகையில், "தென் கொரியா, இன்சியோனில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் அவ்வாறு நடந்து கொண்டதற்காக நான் உண்மையாகவே உங்களிடமும், சர்வதேச குத்துச் சண்டை சங்கத்திடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு நான் நடந்து கொண்டிருக்கக் கூடாது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்" என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், "14 வருட கால எனது இந்த பயணத்தில், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் நான் இதுபோன்று ஒழுங்கீன நடவடிக்கையில் ஒருபோதும் ஈடுபட்டது கிடையாது" என்றும் கூறியுள்ளார்.