வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Maha Lakshmi
Last Modified: புதன், 27 ஆகஸ்ட் 2014 (18:20 IST)

அர்ஜூனா விருதுக்கு என்னை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை? - மனோஜ்குமார் வழக்கு

விளையாட்டுத் துறையில் உள்ள மதிப்புமிக்க விருதுகளுள் ஒன்றாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. இதில் 2014ஆம் ஆண்டிற்கான விருதுப் பட்டியலில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 2010ஆம் ஆண்டு காமன்வெல்த்தில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரர் மனோஜ்குமாரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது; ஆனால் பரிந்துரை செய்யப்படவில்லை.

இந்நிலையில், விருதுக் குழுவினர் தன்னைப் புறக்கணித்து விட்டதாக, மனோஜ்குமார் குற்றம் சாற்றியுள்ளார். மனோஜ்குமார் ஊக்க மருந்தில் சிக்கியவர் என்று தவறாகக் கருதிய தேர்வு கமிட்டி, மனோஜ்குமாரின் பெயரை விருதுப் பட்டியலில் கடைசி வரை சேர்க்கவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த மனோஜ்குமார், அர்ஜூனா விருது கமிட்டியின் முடிவைக் கண்டித்தும், இந்திய விளையாட்டு அமைச்சகத்தை எதிர்த்தும், வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விருதுக்கு என்னை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மனோஜ்குமாருக்காக வாதாடும் வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, விருதினைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் தவறான நபர்கள்இருப்பதாக விமர்சித்தார். 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவருக்கு அர்ஜூனா விருதினை வழங்காமல், அதே போட்டியில் வெண்கலம் வென்றவருக்கு அர்ஜூனா விருதினை வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி விபு பக்ரு, விருதுக் குழுவின் பட்டியலையும், விருதுக்கு எந்தத் தகுதி அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என்ற விவரங்களையும் தாக்கல் செய்யும்படி மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, 2014 ஆகஸ்டு 28 அன்று நடக்கிறது.