வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (08:35 IST)

அர்ஜூனா விருது மறுப்பு: மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ள குத்துச்சண்டை வீரர்

தவறான தகவல்களைக் கூறி அர்ஜூனா விருது பட்டியலில் தனது பெயரை விடுவித்ததால், இந்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார் மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளார்.

விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்குரியவர்களை இந்திய முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான கமிட்டி தேர்வு செய்தது. இந்த முறை கேல் ரத்னா விருதுக்கு யாரையும் பரிந்துரைப்பதில்லை என்று தேர்வு கமிட்டி முடிவு செய்தது.

அர்ஜூனா விருதுக்குக் கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஸ்குவாஷ் வீராங்கனை அனகா அலங்காமணி, குத்துச்சண்டை வீரர் ஜெய் பக்வான் உள்பட 15 பேரை தேர்வு செய்து, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.

விருதுப்பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இதற்கிடையே அர்ஜூனா விருதுக்கு 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் கைப்பற்றியவரான இந்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார் பெயர் பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியவர் என்பதால் அவர் பெயர் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் கசிந்தது.

இதனை கேள்விப்பட்ட மனோஜ்குமார், ‘என் மீது எந்தவிதமான ஊக்கமருந்து புகாரும் கிடையாது. அர்ஜூனா விருதுக்கு நான் தகுதியானவன், எனது பெயரை விடுவித்தது தவறு‘ என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந் மனோஜ்குமாரின் பெயரை விருது பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது சகோதரர் மத்திய விளையாட்டு செயலாளரை சந்தித்துப் பேசினார்.

சர்ச்சை கிளம்பியதன் எதிரொலியாக விருது கமிட்டியினர் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் மேற்கொண்டு 7 வீரர், வீராங்கனைகளின் பெயர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விருதுப் பட்டியலில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கும் மனோஜ்குமார், தனக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

இது குறித்து மனோஜ்குமார் கூறியதாவது:–

“எனது மூத்த சகோதரர் கடந்த 13 ஆம் தேதி மத்திய விளையாட்டுச் செயலாளர் அஜித் ஷரனை சந்தித்துப் பேசினார். அப்போது நான் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவன் என்று விளையாட்டு அமைச்சகம் தவறாக நினைத்து விட்டதாக விளையாட்டுச் செயலாளர் எனது சகோதரரிடம் ஒப்புக்கொண்டார்.

அடுத்து நடைபெறும் விருதுக்கான மறு ஆய்வு பட்டியலில் எனது பெயர் கூடுதலாக சேர்க்கப்படும் என்று அவர் எனது சகோதரரிடம் தெரிவித்தார். அது மட்டுமின்றி ‘சாய் இயக்குநர் என்னை அழைத்துப் பேசி, அர்ஜூனா விருதுப் பட்டியலில் எனது பெயரை சேர்ப்பதாக உறுதி அளித்தார்.

ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இப்போது அவர்கள் பின்வாங்கி விட்டனர். ஆசிய விளையாட்டுக்கான அணித்தேர்வு பயிற்சி முகாம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், விளையாட்டு அமைச்சகத்தின் நடவடிக்கையால் நான் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறேன். பாதிக்கப்பட்டுள்ளேன்.

முதலில், நான் ஊக்கமருந்தில் சிக்கியவன் என்று தவறாக கூறி எனது பெயரை கெடுத்தனர். இதை அடுத்து எனக்கு அளித்த வாக்குறுதியை மீறி நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர். இது என்னை அவமதிப்பதாகும்.“ இவ்வாறு மனோஜ்குமார் கூறினார்.

இது குறித்து மனோஜ்குமாரின் சகோதரரும், பயிற்சியாளருமான ராஜேஷ்குமார் கூறுகையில், “எனது சகோதரருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரரை இது போன்று நடத்தினால், எப்படி அவர்களுக்கு மேலும் வெற்றிகளை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற உத்வேகம் வரும்? எங்களுக்கு நீதி கிடைக்க விரைவில் சண்டிகார் உயர் நீதிமன்றத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகம் மீதுவழக்கு தொடருவோம். அதற்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்வோம்.

இப்போது இல்லாவிட்டாலும் மனோஜ்குமாருக்கு பிறகு விருது கிடைக்கும் என்று தாம்சன் கூறுகிறார். அது எப்படி முடியும்? மனோஜ்குமார், 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர்.

ஆனால் அடுத்த ஆண்டு அர்ஜூனா விருது தேர்வின் போது இவரது இந்த சாதனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஏனெனில் அர்ஜூனா விருதுக்கு கடைசி 4 ஆண்டு செயல்பாடு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும்.

இதன்படி அடுத்த ஆண்டு விருதின் போது 2011 ஆம் ஆண்டில் இருந்து வீரர்களின் சாதனை விவரங்கள்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்“ என்று ராஜேஷ்குமார் கூறினார்.