வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (14:55 IST)

முகமது அலி இறுதி சடங்கில் மதபேதங்களை கடந்து சுமார் 14 ஆயிரம் பேர் பங்கேற்பு

குத்துச்சண்டைக் கலையின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த முகமது அலியின் இறுதிச் சடங்கான ‘ஜனாசா’ தொழுகையில் மதபேதங்களை கடந்து சுமார் 14 ஆயிரம் பேர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
 

 
‘தி கிரேட்’ என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முகமது அலி (74) சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் கடந்த வாரம் ஜூன் 4 அன்று காலமானார்.
 
அவரது உடல் கடந்த 6ஆம் தேதி அரிசோனா நகரில் இருந்து கெண்டகி மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லே நகருக்கு கொண்டு வரப்பட்டது.
 
சவப்பெட்டியின் மீது தங்கநிற அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு நிற போர்வையால் மூடப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட முகமது அலியின் உடலுக்கு கடந்த மூன்று நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 
இறப்புக்கு பின்னர் தனது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என குடும்பத்தாரிடம் முகம்மது அலி தெரிவித்திருந்தார்.
 

 
இதையடுத்து, நேற்று வெள்ளியன்று இறுதிச்சடங்குகள் தொடங்கியது. கலிபோர்னியா நகரை சேர்ந்த சைத்தூன்யா கல்லூரியின் நிறுவனரான இமாம் சைத் ஷாகிர் தலைமையில் நடைபெற்ற ‘ஜனாசா’ தொழுகையில், மதபேதங்களை கடந்து சுமார் 14 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.
 
சர்வமத பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், துருக்கி ஜனாதிபதி தாய்யிப் எர்டோகன், ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பில்லி கிறிஸ்ட்டல் உள்ளிட்ட பல்துறை பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முகமது அலியின் உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.