டேவிஸ் கோப்பை: இந்தியா உலகச் சுற்றுக்கு தகுதி பெற்றது

Webdunia| Last Modified திங்கள், 21 செப்டம்பர் 2009 (10:32 IST)
webdunia photo
FILE
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்திய வீரர் சோம்தேவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக உலக சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்காவை இந்தியா 4- 1 என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி இந்த சாதனையை நிகழ்த்தியது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே டேவிஸ் கோப்பை டென்னிசின் உலக பிளை-ஆப் சுற்று ஜோகனஸ்பர்க் நகரில் 3 நாட்களாக நடந்து வந்தது. முதல் நாளில் இந்திய வீரர்கள் சோம்தேவ் தேவ்வர்மன், ரோகன் பொபண்ணா ஆகியோர் தங்களது ஒற்றையர் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். 2-வது நாளில் இரட்டையர் சுற்றில் காயம் காரணமாக மகேஷ் பூபதி பாதியில் விலகியதால் இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் கடைசி நாளான நேற்று இரு மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் இருந்தது இந்திய அணி. இதில் இந்திய நட்சத்திர வீரரும், தரவரிசையில் 133-வது இடம் வகிப்பவருமான சோம்தேவ் தேர்வர்மனும், 189-ம் நிலை வீரர் தென்ஆப்பிரிக்காவின் ரிக் டீ வோஸ்ட்சும் மோதினார்கள்.

தொடக்கம் முதலே பரபரப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்களை கோட்டை விட்ட சோம்தேவின் ஆட்டம் அதன் பிறகு நம்ப முடியாத அளவுக்கு வியப்பாக இருந்தது. சரிவில் இருந்து மீண்டு பதிலடியை தொடங்கிய அவர் 3-வது செட்டை டைபிரேக்கர் வரை சென்று மீட்டார்.
4-வது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி அதனை எளிதாக தனதாக்கினார். இதையடுத்து 5-வது மற்றும் கடைசி செட் இருவருக்கும் வெற்றியை நிர்ணயிக்கும் செட்டாக அமைந்தது. இதில் தொடக்கத்தில் வோஸ்ட்டின் (2௧) கை சற்று ஓங்கி இருந்தது. அதன் பிறகு தனது அதிரடியான ஷாட்கள் மூலம் சோம்தேவ் அந்த செட்டையும் சொந்தமாக்கி, உள்ளூர் நாயகன் வோஸ்ட்டின் சவாலுக்கு முடிவு கட்டினார்.
4 மணி 38 நிமிடங்கள் நீடித்த இந்த போராட்டத்தில் சோம்தேவ் 3- 6, 6- 7(3), 7- 6(5), 6- 2, 6- 4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி ஈட்டினார்.

இதன் மூலம் 11 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 16 அணிகள் பங்கேற்கும் உலக சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி சாதனை படைத்து இருக்கிறது. கடைசியாக இந்திய அணி 1998-ம் ஆண்டு உலக சுற்றுக்கு முன்னேறி இருந்தது. அதில் இத்தாலியிடம் 1- 4 என்ற கணக்கில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி டேவிஸ் கோப்பையில் தென்ஆப்பிரிக்காவை இந்தியா தோற்கடிப்பதும் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 1967 ஆண்டு 0- 5 என்ற கணக்கிலும், 1994-ம் ஆண்டு 2- 3 என்ற கணக்கிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய கேப்டன் மிஸ்ரா, இளம் இந்திய வீரர் யுகி பாம்ப்ரியை களமிறக்கினார், வான் டெர் மெர்வுடன் நடந்த அந்த போட்டியில் யுகி பாம்ப்ரி வெற்றி பெற்று இந்திய அணிக்கு அபாரமான 4- 1 என்ற வெற்றியை ஈட்டித் தந்தார்.
சோம்தேவ் தேவ் வர்மனின் அச்சாத்தியமான, உறுதியான டென்னிஸ் ஆட்டத்தினாலும், முன்னணி வீரர்களான பயஸ், பூபதி இல்லாத நிலையில் போபண்ணா வெளிப்படுத்திய ஆட்டமும் இந்திய அணியை 11 ஆண்டுகளுக்கு பிறகு உலக டேவிஸ் கோப்பை சுற்றுக்கு தகுதி பெறச் செய்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :