வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. கட்டுரைகள்
Written By Webdunia
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2014 (16:00 IST)

ஆங்கிலேய மனோநிலை புரியாமல் பேசும் அப்பாவி கெவின் பீட்டர்சன்!

ஆஸ்ட்ரேலியாவிடம் வரலாறு காணாத 5- 0 என்று டெஸ்ட் உதை பெற்ற இங்கிலாந்து அணியின் முக்கிய உறுப்பினர் கெவின் பீட்டர்சன் ஆங்கிலேயர்களின் மனநிலை தெரியாமல் தான் 10,000 ரன்களை எடுக்கவேண்டும் என்றும், ஆஷஸ் தோல்விக்கு பழிக்குப் பழி வாங்குவேன் என்றும் பேசி வருகிறார்.
FILE

இந்த ஆஷஸ் தொடரில் பீட்டர்சன் 5 டெஸ்ட்களிலும் சேர்த்து 294 ரன்களை 30 ரன்கள் சராசரி என்ற விகிதத்தில் பெற்றுள்ளார்.

எப்பவுமே இதுபோன்ற தோல்விகளுக்குப்பிறகு யாரையாவது பலிகடாவாக்கவேண்டும் என்று ஆங்கிலேயர்கள் நினைப்பது வழக்கம்! அதுவும் அவர் அயல்நாட்டு வீரராக இருந்தால் பிரமாதம் என்று யோசிப்பது இங்கிலிஷ் ஸ்டைல். பீட்டர்சன் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். ஒருநாளும் நான் ஆங்கிலேயன் அல்ல என்றெல்லாம் அவர் பேசியிருக்கிறார்.

இந்தத் தோல்விகளுக்கு யாரை பலி கடாவாக்கலாம் என்ற போக்கு இப்போதே இங்கிலாந்து அணி நிர்வாகத்தினரிடம் ரகசிய வியாஜ்ஜியம் கொண்டுள்ளது.

இந்த நிலையில், "ஆதரவளித்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு நன்றி, மீண்டும் ஆஷஸ் கலசத்தை திரும்பப் பெற்றுத் தருவதுதான் என் வேலை" என்று கூறுகிறார் அப்பாவியாக.
FILE

294 ரன்கள் எடுத்திருந்தாலும் அவர் 2வதாக 3வதாகவோ இருக்கிறார். ஒட்டுமொத்த பேட்டிங் தோல்விதான். ஆனாலும் பலி கடா தேவைப்படுமே? இங்கிலாந்து வீரர்களை அதாவது பெல், குக் போன்றவரகள் மீது கை வைக்க முடியாது. பிறகு ஒட்டுமொத்தமாக அனைவரையும் நீக்கிவிட்டால் வேறு யார் விளையாடுவது?

மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் ஆஷஸ் வம்பு தும்பே வேண்டாம் என்று போய்விட்டார் ஜானதன் டிராட். ஆனால் அவர் சாது! பீட்டர்சன் ஏற்கனவே பல சர்ச்சைகளில் ஈடுபட்டுள்ளார்.

அணியில் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோருக்கு பீட்டர்சனை பிடிக்காது. ஸ்டூவர்ட் பிராட்தான் பல விஷயங்களை இங்கிலாந்தில் தீர்மானிக்கிறார். அவரது தந்தை கிறிஸ் பிராடின் லாபி அப்படி.

ஜெஃப் பாய்காட்டிற்கு பீட்டர்சன் பற்றிய நல் மதிப்பு கிடையாது. மைக்கேல் வான், தோல்விக்கு பீட்டர்சனை மட்டும் பொறுப்பாக்குவது கூடாது என்று கூறுகிறார். இப்படி கூறுகிறார் என்றால் அது போன்ற ஒரு சிந்தனை அங்கு இருக்கிறது என்பதே வெட்ட வெளிச்சமாகிறது.

மேலும் பீட்டர்சனை...

ஒதுக்கிவிட்டால் அது இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு பெரிய நஷ்டம் என்று இப்போதே ஆபிச்சுவரி காலம் எழுதத் தொடங்கி விட்டார் அவர்.
FILE

பீட்டர்சனுக்கு மேலும் வாய்ப்புகள் கொடுக்கவேண்டும், அவர் ஒரு கேரக்டர், அவர் அணியில் இல்லாமல் இருந்தால் ஓய்வறையே டல்லாக இருக்கும் என்று இப்போதே அவரை அணியிலிருந்து நீக்கி விட்டது போல் பேசுகிறார் என்றால் கெவின் பீட்டர்சன் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது என்றே அர்த்தம்!

யாரைப் போட்டுப்பார்ப்பது என்று இங்கிலாந்து யோசிக்காமல் எங்கு பேட்ஸ்மென்கள் தவறு செய்தனர் என்று இங்கிலாந்து யோசிக்கவேண்டும், ஆரம்பத்திலிருந்தே குக் ஒரு நல்ல ஆக்ரோஷமான கேப்டன் அல்ல டல்லான கேப்டன் என்று வார்ன் கூறிவந்தார். ஸ்வான் அல்லது பீட்டர்சந்தான் சரியான தேர்வு என்று கூறினார்.

ஸ்வான் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். டிராட் பாதியில் கிளம்பிவிட்டார். குக் ஒரு கேப்டனாக ஸ்வானிடம் பேசி தடுத்திருக்கவேண்டும், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.

ஆஸ்ட்ரேலியா எப்படி மனதொடிந்த மிட்செல் ஜான்சனை ஒரு பெரிய சக்தியாக மாற்றியுள்ளது அது போன்ற அணுகுமுறை தேவை.

குக் ஆகட்டும், தோனியாகட்டும் கிளார்க்கிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளவேண்டியுள்ளது.

கெவின் பீட்டர்சனை நீக்க்குவது பலிகடா ஆக்கும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை என்பதை நாம் அறிவுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.