1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. கட்டுரைகள்
Written By
Last Updated : சனி, 5 ஏப்ரல் 2014 (17:25 IST)

கோப்பையை வெல்ல இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம்!

நாளை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்,  இருக்கும் நிலவரங்களைப் பார்க்கும்போது இந்தியா கோப்பையை வெல்லவே வாய்ப்புகள் அதிகம் இருப்பது போல் தெரிகிறது.

போட்டிகள் துவங்கும் முன் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்று எழுதினோம், ஆந்னால் அப்போது சூழ்நிலை அப்படித்தான் இருந்தது. ஆனால் இந்திய அணியின் இந்த திடீர் எழுச்சி எதிரணியினருக்கு மட்டுமல்ல நமக்குமே ஆச்சரியம்தான், இந்த நிலையில் இயற்கையின் சதி தவிர இந்தியா கோப்பையை வெல்லாமல் போக வாய்ப்பு குறைவுதான் என்று தோன்றுகிறது.
 
அப்படி வென்றால் 2011 உலகக் கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2014 ஐசிசி T20 உலகக் கோப்பை ஆகிய 3 ஐசிசி கோப்பைகளை அடுத்தடுத்து வென்ற பெருமை தோனிக்கும் இந்தியாவுக்கும் கிடைக்கும்.

இலங்கை அணி இதுவரை கடுமையாக போராடி வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்திருந்தாலும் அதன் 
மிகப்பெரிய பலம் ஸ்பின் பந்து வீச்சே. அது இந்தியாவுக்கு எதிரகா குறிப்பாக கோலி இருக்கும் ஃபார்மில் எடுபடுமா என்பது சந்தேகமே.
சேனநாயகே நன்றாக வீசினாலும் நியூசீலாந்துக்கு எதிராக ரங்கன்னா ஹெராத் 3 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை ரிபீட் செய்யும் வாய்ப்பு மிகக்குறைவு, அவர் ஒரு மரபான ஸ்பின்னர், பிட்சில் திருப்பம் இருந்தால்தான் அவர் சோபிக்க முடியும் அதுவும் அந்த வேகத்தில் பலமான இந்திய பேட்டிங்கை சோதனை செய்வது அவரால் முடியாது.
 
மேலும் அவர் ரீச்சில் போடக்கூடிய பவுலர் அப்படி ரீச்சில் வீசினால் இந்திய பேட்ஸ்மென்கள் அவருக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்பது உறுதி. மலிங்காவின் 4 ஓவர்கள் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக ஆடவேண்டும். ஆனாலும் அவருக்கு யார்க்கரைத் தவிர வேறு வகை பந்துகள் அவ்வளவு விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
 
மேலும் மலிங்காவுக்கு எதிராக கோலி சிறந்த ரிக்கார்டுகளை வைத்துள்ளார். ஆஸ்ட்ரேலியாவில் அவரை புரட்டி எடுத்து 321 ரன்கள் இலக்கை 38 ஓவர்களி முடித்ததை இன்னும் மலிங்கா நினைவில் வைத்திருப்பார் என்றே தோன்றுகிறது.

இந்தியாவை பொறுத்தவரையில் யுவ்ராஜ் சிங் ஒரு சுமையாகவே இருக்கிறார். அவருக்கு கால்கள் நகரவில்லை. பந்துகளை கணிப்பதிலும் கடுமையாக தடவுகிறார். உள்ளே வரும் பந்துக்கு வெளியே செல்லும் பந்து போல் ஆடுகிறார். வெளியே செல்லும் பந்தை உள்ளே வரும் பந்து போல் ஆடுகிறார். பீல்டிங்கும் சொதப்ப துவங்கிவிட்டது. அவரால் உருப்படியான பங்களிப்பு செய்ய முடியுமா என்பது சந்தேகமே. ஆகவே தவான், ரஹானேயை துவக்கத்தில் களமிறக்கி அவரது டவுனில் ரோகித் சர்மாவை களமிறக்குவது இன்னும் இந்திய பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கும் என்றே தோன்றுகிறது.
அல்லது யுவ்ராஜிற்கு பதிலாக ரெய்னாவை அந்த டவுனி  இறக்கி பிறகு ஜடேஜாவை இறக்கிப் பார்க்கலாம். கூடிய வரையில் முக்கிய தருணங்களில் யுவ்ராஜை களமிறகாதது நல்லது என்றே படுகிறது.
 
அதே போல் பந்து வீச்சில் முதலில் இந்த மோகித் சர்மாவை தூக்கி எறியவேண்டும், மொகமத் ஷமியைத்தான் களமிறக்கவேண்டும். இது என்ன சென்னை சூப்பர் கிங்சா? அல்லது எதிரே விளையாடுவது என்ன ராஜஸ்தான் ராயல்ஸா? அவர் சர்வதேச பந்து வீச்சிற்கு லாயக்கற்ற ஒரு பவுலர் என்பது வெட்ட வெளிச்சம்.
 
அதேபோல் தோனி துவக்கத்தில் ஒரு முனையில் வேகம் ஒரு முனையில் அஷ்வின் என்ற சேர்க்கையை மாற்றக்கூடாது. நேற்று அவ்வாறு மாற்றித்தான் தென் ஆப்பிரிக்கா 5 ஓவர்களில் 44 ரன்கள் அடித்தது. தோனி ஒரு வீரருக்கு உத்தி வகுக்காமல் ஒட்டுமொத்த அணிக்கும் வியூகம் வகுக்கவேண்டும். சங்கக்காரா, ஜெயவர்தனே கடைசி T20 போட்டியில் விளையாடுகின்றனர்.

உடனே அவர்களுக்காக நாங்கள் கோப்பையை வெல்வோம் என்றெல்லாம் ஒரு பஜனை பேச்சு இலங்கையிடம் எழும். அதற்கு வாய்ப்பே அளிக்கக்கூடாது.
குஷல் பெரேராவைக் கட்ட அஸ்வின் அவசியம், அதேபோல் எப்போதும் தட்டுத் தடுமாறும் தில்ஷனை விளையாட விடுவது இந்தியாவின் வழக்கம் அதனையும் நாளை செயல்படுத்த விடாமல் செய்தால் நிச்சயம் இலங்கை 140 ரன்களுக்குக் கீழ்தான் எடுக்கும் பிறகு இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
 
தோனி இன்னும் முன்னதாக களமிறங்கவேண்டியது அவசியம், மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அவர் சமீப உடல் செய்கைகள் தெரிவிக்கின்றன. இது ஆபத்தான போக்கு என்பது நம் துணிபு.
 
இப்போது இந்தியாவுக்கு டாஸ் ஒரு பிரச்சனையல்ல, அதில் வென்றால் என்ன தோற்றால் என்ன, முதலில் பேட் செய்தால் என்ன பவுல் செய்தால் என்ன? தென் ஆப்பிரிக்காவின் சிறந்தபந்து வீச்சு பீல்டிங்கிற்கு எதிராக கடின இலக்கை துரத்தி வெற்றி கண்ட இந்திய அணியினால் இலங்கையை வீழ்த்த முடியாதா என்ன? 
 
இன்னொரு உலகக் கோப்பை ரிபீட் பெர்ஃபார்மன்சுக்கு இந்திய அணிக்கு முன் கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்து விடுவோம்.