வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. க‌ட்டுரை
Written By Veeramani
Last Updated : வியாழன், 10 ஏப்ரல் 2014 (18:53 IST)

விஜய் படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சவின் நண்பரல்ல - பேட்டியும் பித்தலாட்டமும்

விஜய்யின் கத்திப் படத்தை கருணாமூர்த்தியின் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த லைகா நிறுவனம், ராஜபக்சவின் தொழில் கூட்டாளி, அவரின் பாசிச கரத்தை வலுப்படுத்தும் தமிழ் பங்காளியின் நிறுவனம் என ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
Lyca
கத்தி படம் குறித்து விஜய்யும், முருகதாஸும் யோசிப்பதற்கு பல மாதங்கள் முன்பே லைகா நிறுவனம் ராஜபக்சவின் பாசத்துக்குரிய பங்காளி என்பதை ஈழத்தமிழர் நடத்தும் பல்வேறு ஊடகங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தின.
Lyca
இந்நிலையில் பிரச்சனை பெரிதாவதை அறிந்த ஐங்கரன் கருணாமூர்த்தி சென்னையில் நேற்று பேட்டியளித்தார்.

நானும் சுபாஷ்கரனும் 30 வருடங்களுக்கு முன்பே இலங்கையைவிட்டு வெளியேறினோம். 27 வருடங்களாக நான் சினிமா தொழில் செய்து வருகிறேன். சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டே பல்வேறு நாடுகளில் தொழில் செய்து வருகிறோம்.
லைகா சுபாஷ்கரன் இலங்கை முல்லைத்தீவை சேர்ந்த தமிழர். அவருக்கும் ராஜபக்சேக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 30 வருடங்களுக்கு முன்பு நாட்டைவிட்டு வெளியேறிய சுபாஷ்கரன் 2013 ஆம் ஆண்டு மே மாதம் தனது பூர்வீக பூமியை பார்க்க இலங்கைக்கு வந்தார். அவருடன் நானும் சென்றிருந்தேன். அப்போது இரண்டு ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து முல்லைத்தீவு பகுதிகளை சுற்றிப் பார்த்தோம். மற்றபடி எங்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார்.
கருணாமூர்த்தி சொன்னதில் பாதிக்கு மேல் பொய். லைகா தொலைதொடர்பு நிறுவனம் எப்படி இலங்கை அரசிடமிருந்து - அதாவது ராஜபக்சயிடமிருந்து சலுகைகளைப் பெற்றது, அதில் ராஜபக்சவின் மைத்துனரின் பங்களிப்பு என்ன என்பது பற்றி விவரமாக இனியொரு இணையதளம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோல் கருணாமூர்த்தியும், சுபாஷ்கரனும் இலங்கையை சுற்றிப் பார்த்தது வாடகைக்கு விடப்படும் ஹெலிகாப்டர்களில் அல்ல. இலங்கை அரசுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டரில். அவர்களை வரவேற்க வந்தவர்களில் ராஜபக்சவின் மந்திரி சபையில் அமைச்சராக இருந்த கிரிக்கெட் வீரர் சனத் ஜெய்சூர்யாவும், இலங்கை ராணுவ அதிகாரிகளும் இருந்தனர். ராஜபக்சவின் விருந்தினர்களாகவே கருணாமூர்த்தியும், சுபாஷ்கரனும் இலங்கையில் நடத்தப்பட்டனர். அதற்கு புகைப்பட ஆதாரங்களும் உள்ளன.
கத்தி படத்துக்கு முன்பு லைகா நிறுவனம் ஞானம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் கரு.பழனியப்பன் இயக்கத்தில் சேரன் நடித்த பிரிவோம் சந்திப்போம் படத்தை ஏற்கனவே தயாரித்துள்ளது என பேட்டியின் போது கருணாமூர்த்தி கூறினார். இந்த ஞானம் புரொடக்ஷன்ஸில் பங்குவகிக்கும் சிவசாமிக்கும் ராஜபக்சவின் மைத்துனருக்கும் உள்ள தொழில் தொடர்புகளையும் ஏற்கனவே ஈழத்தமிழர்களின் இணையதளங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
 
லைகா நிறுவனர் சுபாஷ்கரனும் அவரது நிறுவனங்களும் ராஜபக்சவின் மறைமுக தொழில்கூட்டாளிகள் என்பது ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட ஒன்று. ராஜபக்சவின் பங்காளியின் படத்தில் தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் பங்கேற்கலாமா கூடாதா என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்.