1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. க‌ட்டுரை
Written By Webdunia

இந்தியன் காப்பி கல்சர் - ஒரு தத்துவப் பார்வை

இணையத்தை திறந்தால் எந்தப் படம் எந்த மொழியிலிருந்து திருடப்பட்டது என்ற தகவல்கள் கொட்டுகின்றன. படம் பார்க்கும் சராச‌ரி ரசிகனுக்கு இந்த திருட்டுகளின் மூலம் சகஜமாக‌தெ‌ரிந்திருக்கிறது. அப்படியிருக்க இந்தியன் காப்பி கல்சர் என்று தனியாக நாம் வேறு எழுத வேண்டுமா? காப்பி கல்சர் தொடர்ந்து வராமல் போனதற்கு இந்த கேள்வி உருவாக்கிய தடுமாற்றம் முக்கிய காரணம். ஆனால் காப்பி என்பது அதன் மூலத்தை தெ‌ரிந்து கொள்வதுடன் முடிந்துவிடுவதில்லை. அது தத்துவச் சிக்கலை உள்ளடக்கியது. இதனைத்தான் வரப்போகிற பகுதிகளில் நாம் பார்க்கப் போகிறோம்.
FILE

சில விமர்சகர்கள் பிற மொழியிலிருந்தோ சொந்த மொழியிலிருந்தோ காப்பியடித்து ஒரு படத்தை உருவாக்கினால் அதனை காப்பி என்று சொல்வதில்லை. மறு உருவாக்கம் என்ற பதத்தை பிரயோகிக்கிறார்கள். ஒ‌ரி‌ஜினல் என்றால் உருவாக்கம். அதை காப்பி செய்தால் மறு உருவாக்கம். உருவாக்கத்துக்கு மிக அருகில் இருக்கும் சொல் மறு உருவாக்கம். காப்பி என்ற வார்த்தை தரும் அசௌக‌ரியத்தை மறு உருவாக்கம் தருவதில்லை. மாறாக ஒரு படைப்பாளிக்கு‌ரிய அங்கீகாரத்தை இச்சொல் கோருகிறது. மறு உருவாக்கம் என்ற பதத்தை இவர்கள் பயன்படுத்த என்ன காரணம்?

விமர்சகரும், ஆய்வாளருமான ராஜன்குறை - இவர் தொடர்ந்து காட்சிப்பிழைதிரை என்ற பத்தி‌ரிகையில் எழுதி வருகிறார். கதாநாயகனின் மரணம் என்ற சினிமா தொடர்பான புத்தகத்தின் ஆசி‌ரியர் - வால்டர் பெஞ்சமினின் தி வொர்க் ஆஃப் ஆர்ட் இன் த ஏ‌ஜ் ஆஃப் மெக்கானிகல் ‌‌ரபுரொடக்சன் கட்டுரையை முன் வைத்து காட்சிப்பிழைதிரையில் கட்டுரை ஒன்றை சில மாதங்கள் முன்பு எழுதினார் ராஜன்குறை. அந்தக் கட்டுரையில் மேலே உள்ள கேள்விக்கான பதில் உள்ளது. கட்டுரையை நேரடியாக அணுகினால் பலரும் சினிமா பார்ப்பதை விட்டு விடுவதற்கான வாய்ப்புள்ளதால் கட்டுரையின் சாராம்சத்தை அடுத்தடுத்தக் கட்டுரைகளில் மேலோட்டமாக தொட்டுச் செல்லலாம். இப்போது முன்னோட்டமாக சில.

FILE
முதலாவதாக அனைத்து காப்பிகளையும் ஒரே தராசில் வைக்க இயலாது. உதாரணமாக உசேன் போல்ட் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்கிறார். எந்த டயட்டை பின்பற்றுகிறார் என்பதை தெ‌ரிந்து அதனை அப்படியே பின் பற்றினாலும் உசேன் போல்டை போல் 9.63 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடக்க முடியுமா என்பது சந்தேகம். ஜாக்கிசான், ஜெட் லீ போடும் சண்டைகளை அப்படியே பிரதி செய்வது என்பது கடினம். அவ்வை சண்முகி Tootsie படத்தின் காப்பியாக இருந்தாலும் பெண்ணாக நடிப்பதற்கு தனித் திறமை வேண்டும். Amores Perros படத்தில் வரும் விபத்து, அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட மூன்று வெ‌வ்வேறு மனிதர்களின் வாழ்க்கை என்ற திரைக்கதை வடிவத்தை ஆய்தஎழுத்து கொண்டிருந்தாலும் இரண்டு படங்களில் வரும் கதைகளும் கதைக்களனும் வேறு. Amores Perros திரைப்படத்தைப் பார்த்த எல்லோராலும் ஆய்தஎழுத்தைப் போல் ஒரு கதையை எழுதிவிட முடியும் என்று சொல்ல முடியாது. காப்பி அடிப்பது என்றாலும் அதற்கும் தனித்திறமை வேண்டும்.

இன்னொரு பக்கம் பார்த்தால் காப்பிக்கு திறமையே தேவையில்லை. ஒரு இசைக் கலைஞன் உருவாக்கிய இசை கோவையை அடிப்படை இசை ஞானம் மட்டுமே தெ‌ரிந்த யாராலும் மறுபடியும் உருவாக்கிட முடியும். அராபிய பாடலோ ஆப்பி‌ரிக்க பாடலோ அப்படியே எந்த மொழியிலும் சுட்டுவிடலாம். இதற்கு தனித்திறமை எதுவும் தேவையில்லை. திரைக்கதையிலும் திறமை தேவைப்படாத காப்பிகள் உண்டு. டோனி ஸ்காட்டின் மேன் ஆன் ஃபயர் படத்தை ஆணை என்ற பெய‌ரில் தமிழில் எடுத்தனர். அப்படியே உல்டா. திரைக்கதையாசி‌ரியர் தனியாக எதையும் யோசிக்கவில்லை. அதில் சிஐஏ-யின் ட்ரெய்ன்டு கில்லர் என்றால் இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். இடையிடையே இரண்டு டூயட். மற்றபடி ஈயடிச்சான் காப்பி.

FILE
இதிலிருந்து ஒன்றை பு‌ரிந்து கொள்ளலாம். காப்பியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று சவாலான காப்பி, இரண்டு ஈயடிச்சான் காப்பி. இரண்டுக்குமான உதாரணங்களை பார்க்கலாம்.

முதலாவதாக கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் குள்ள கமலின் காதல் கதை. சர்க்கஸ் பின்னணியில் அமைந்த இந்தப் பகுதி சார்லி சாப்ளினின் சர்க்கஸ் படத்திலிருந்து நுட்பமாக எடுக்கப்பட்டது. சர்க்கஸில் வரும் சாப்ளினின் காதல், பி‌ரிவு, மோதிரம் மாற்றுதல் போன்றவை அப்படியே அபூர்வ சகோதரர்களில் காணப்படும். என்றாலும் இரண்டையும் கமலின் திரைக்கதை வேறுபடுத்தியிருக்கும்.

ஈயடிச்சான் காப்பிக்கு அதிக தூரம் போக வேண்டாம். சமீபத்தில் வந்த கலகலப்பு படம் ஜெர்மன் படமான ஸோல் கிச்சனின் அப்பட்ட காப்பி. சந்தானம் சம்பந்தப்பட்டவை மட்டுமே புதுசு. கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் அப்படியே உருவப்பட்டிருக்கும்.
FILE

சவாலான காப்பி, ஈயடிச்சான் காப்பி என்று பி‌ரித்தாலும் காப்பியின் மையம் இதுவல்ல. காப்பியடிக்கப்பட்ட படமும், நபர்களும் சர்ச்சையை உருவாக்குவதற்கான காரணங்கள் வேறு. அவற்றை அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.