வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 6 பிப்ரவரி 2015 (11:04 IST)

என்னை அறிந்தால் - சரியா சிம்புவின் சர்ச்சை பேச்சு?

என்னை அறிந்தால் படத்தைப் பார்த்த சிம்பு, தனது ட்விட்டரில், ரொம்ப காலத்திற்குப் பிறகு தமிழில் ஒரு அருமையான படம் வெளியாகியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர, தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
சிம்புவின் இந்தப் பேச்சு சரியா என இணையத்தில் விவாதம் எழுந்துள்ளது.
முதலாவதாக, ரொம்ப காலத்துக்குப் பிறகு ஒரு நல்ல தமிழ்ப் படம் என்று குறிப்பிடுகிறார். சமீபத்தில் வெளியான ரஜினியின் லிங்கா, அஜீத்தின் வீரம், பில்லா 2 படங்களையும் சிம்பு ரொம்ப நல்ல படம் என்று கூறி ட்விட்டரில் புகழ்ந்திருந்தார். அப்படியென்றால் அந்த புகழுரைகள் எல்லாம் போலியானவையா?
 
தங்களது பொருளை வாங்குகிறவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்பது போல தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் வருகின்றன. கண்டிக்கப்பட வேண்டிய இத்தகைய விளம்பரங்களைப் போல்தான் உள்ளது சிம்புவின் பேச்சும். என்னை அறிந்தால் உண்மையிலேயே நல்ல படமாகவே இருக்கட்டும். அதற்காக அந்தப் படம் பிடிக்காதவர்களை எப்படி ஒருவர் மனநலம் தவறியவர் எனலாம்?
 
ஒருமுறை காதலித்தால்தான் காதல், பலமுறை காதலிப்பது விபச்சாரம் என்று ஒருவர் கூறினால் அது சிம்புவை காயப்படுத்துமா இல்லையா?

மனநலம் குறித்து எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் தனது ஒளிவிலகல் சிறுகதை தொகுதியில் அருமையான சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார். கதையின் நாயகன் சென்னை புறநகரிலிருந்து தினமும் மின்சார ரயிலில் சென்னைக்கு வந்து வேலை பார்ப்பவன். அவர் ரயில் ஏறும் ஸ்டேஷனில் ஒரு பைத்தியக்காரன் அழுக்கு உடையுடன் எப்போதுமிருப்பான்.

சிகரெட் துண்டுகளை பொறுக்கியெடுத்து ரயில்வே பிளாட்பார்மின் ஒருபுறத்திலிருந்து இன்னொருபுறத்துக்கு வேகமாக நடந்து செல்வான். பிறகு அதே வேகத்தில் திரும்பி வந்து ஓரிடத்தில் அமர்ந்து கொள்வான். சற்று நேரம் கழித்து மீண்டும் பிளாட்பார்மின் இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம்வரை வேக நடை, சிறிது ஓய்வு. பிறகு மீண்டும் நடை.
 
இப்போது, கதையின் நாயகன் யோசித்துப் பார்ப்பான். தனது பார்வையில் அவனை எடை போடுவது போல், அந்த பைத்தியக்காரன் தன்னை குறித்து யோசித்தால் எப்படி இருக்கும்?
 
தினமும் சரியாக எட்டு மணிக்கு வருகிறான். பெட்டிக்கடையில் ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைக்கிறான். முதல் ரயில் கூட்டமாக வந்தாலும், கூட்டம் குறைவாக இருந்தாலும் ஏறாமல் தயங்கி நிற்கிறான். இப்படி இரண்டு ரயில்களை போகவிட்டபின், அடுத்து வரும் ரயில் கூட்டமாக இருந்தாலும் பாய்ந்து ஏறிக் கொள்கிறான். இதுதான் அவனது அனுதினம் நடைமுறை.
 
யுவன் சந்திரசேகரின் கதை நாயகன் இப்படி யோசிக்கிறான். அந்த பைத்தியக்காரனும் நானும் ஏதோ ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேnம். என்னுடைய செயலுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதைத்தாண்டி அவனும் நானும் ஒன்றுதான்.
 
உண்மையில் யார் மனநலம் தவறியவர்கள்? படம் நன்றாக இல்லை என்பவர்களா? உயிரற்ற பேனருக்கும், கட்அவுட்டுக்கும் பால ஆபிஷேகம் என்ற பெயரில் குழந்தைகளுக்கான பாலை வீணடிப்பவர்களா? ஐப்பது ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறவர்களா? முதல்நாளே படம் பார்க்க வேண்டும் என்று போலீஸின் தடியடி வாங்கி சட்டையை கிழித்துக் கொள்கிறவர்களா?
 
நான் சுயநினைவோடு இருக்கிறேன் என்ற நம்பிக்கை மட்டுமே மனநலம் தவறியவர்கள் குறித்து பேசுவதற்கான தகுதியாகிவிடாது.