வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (08:27 IST)

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு தலைவர்களின் புகழஞ்சலி

எழுத்தாளர் ஜெயகாந்தனின் மறைவு தமிழ் இலக்கிய உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரணம் என்பதும் வாழ்வின் ஒரு பகுதி. அதனை ஏற்றுக் கொள்ள பழக வேண்டுமே தவிர, அதனை ரசிக்கக்கூடாது. மரணத்துக்காக அழுவதும் மரணத்தை ரசிப்பதுதான் என்றார் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தனை படித்து ரசித்தவர்களுக்கு அவரது மரணத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாது. அது ஈடு செய்ய முடியாத இழப்பு.


கருணாநிதி

தமிழ் இலக்கிய உலகத்தில் ஜே.கே என்று அன்பொழுக அழைக்கப்பட்ட - எழுத்துலகச் சிற்பி, அருமை நண்பர் ஜெயகாந்தன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிர்ச்சியுற்றேன். துயரம் தனித்து வருவதில்லை என்பது எவ்வளவு உண்மை.

நேற்றிரவு இசைமுரசு நாகூர் அனீபா மறைந்த செய்தியைத் தொடர்ந்து ஜெயகாந்தனின் மறைவுச் செய்தி கிடைத்தது.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தின்மீது ஜெயகாந்தன் கொண்டிருந்த வெறுப்பு காலப் போக்கில் மாறியது; அவருடைய அணுகுமுறையும் மாறிற்று.

என்மீது பாசத்தைப் பொழியத் தொடங்கினார். கடந்த நான்காண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தன் இசபெல்லா மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியினை அறிந்து, என் மனைவி ராஜாத்தியும், என் மகள் கனிமொழியும் அவரை நேரில் சென்று பார்த்து விட்டுவந்து என்னிடம் கூறியதும், அப்போது முதலமைச்சராக இருந்த நான் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கச் செய்து, சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கச் செய்தேன்.

உடல்நலம் அப்போது தேர்ச்சியடைந்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறிய போது கூட, தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மா. ராஜேந்திரனிடம், "நான் வீட்டிற்குச் செல்லும்முன் கலைஞரைப் பார்த்து நன்றி கூறி விட்டுத்தான் செல்வேன்" என்று பிடிவாதமாகக் கூறி, நேரில் என்னை வந்து சந்தித்து, "என் உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள்" என்ற ஜெயகாந்தனின் சொற்கள் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன.

மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான ஞான பீட விருது, பத்ம பூஷண் விருது, சாகித்ய அகாடமி விருது, முரசொலி அறக்கட்டளை சார்பில் இலக்கியத்திற்கான விருது என பல விருதுகளைப் பெற்றவர்.

பெருந்தலைவர் காமராசருடன் நெருங்கிப் பழகியவர். என்னிடம் மாறாத அன்பு கொண்டவர். பல நிகழ்ச்சிகளில் என்னுடன் இணைந்து கலந்து கொண்டவர். இலக்கிய உலகில் புகழ்க்கொடி நாட்டியதோடு, திரையுலகிலும் முத்திரை பதித்தவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துகள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில்நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை.

வைரமுத்து

ஜெயகாந்தன் என்பது ஒற்றைச்சொல்லில் ஒரு சரித்திரம். அது இந்திய இலக்கியத்தின் தமிழ் அடையாளம். ஞானபீடம் என்பது அவர் பெற்ற விருதல்ல; அவர் எழுத்துக்களே ஞானபீடம்தான்.

சூரிய வெளிச்சம்கூட எட்டிப் பார்த்திராத வாழ்க்கையை தன் கலைக்கண்களால் பார்த்துப் பதிவு செய்தவர்; விளிம்புநிலை மனிதர்களை உலக இலக்கியக் கதாபாத்திரங்களாய் உலவச் செய்தவர் ஜெயகாந்தன்.

சமரசம் செய்து கொள்ளாததே அவரது வாழ்வின் கிரீடம் என்று நான் கருதுகிறேன். அதனால் அவர் வாழநினைத்த சத்தியத்தின் வெளியிலேயே அவரது வாழ்வு கழிந்தது.

எழுத்தாளனுக்கென்று வார்க்கப்பட்ட ஒரு தொங்கிப்போன உருவத்தை அவர் துடைத்தழித்தார்; கம்பீரமே அவரது உருவமாயிற்று.

பாரதி எழுத வந்த பிறகு கவிதைக்கு மீசை முளைத்தது போல ஜெயகாந்தன் எழுத வந்த பிறகு உரைநடைக்கு மீசை முளைத்தது.

அரசியலால் இலக்கியத்தையும், இலக்கியத்தால் அரசியலையும் செழுமைப்படுத்த முயன்றவர். 60களிலேயே தமிழுக்கு ஒரு மாற்றுத்திரைப்படத்தை முன்வைத்தவர்.

இலக்கியத்தின் எல்லா வடிவங்களுக்கும் பங்களிப்புச் செய்திருக்கிறார். பல எழுத்தாளர்களின் முதல் எழுத்துக்கு உந்துசக்தி தந்திருக்கிறார். புதுமைப்பித்தன் விட்டுப்போன இடத்தை ஜெயகாந்தன் இட்டு நிரப்பினார். அழியாத பல சிறுகதைகளையும் சில நாவல்களையும் படைத்திருக்கிறார்.

அழியும் உடல் கொண்டுதான் மனிதன் அழியாத காரியங்களை ஆற்றிப் போகிறான். அவரது பௌதிக உடல் மறையும்; படைப்புகள் மறைவதில்லை.

ஜெயகாந்தன் புகழை உயர்த்திப் பிடிக்கும் கூட்டத்தின் முன்வரிசையில் நானுமிருப்பேன்.

ஜெயகாந்தன் படைப்பே நீ வாழ்க.
பாரதிராஜா

எவ்வளவோ பதிவுகள் இருக்கும். இருந்தாலும் சுருக்கமாக தமிழ் இலக்கிய வனத்திலே ஒரு சிங்கமாக நடைப்போடு வளர்ந்த அந்த கர்ஜனை இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஜெயகாந்தன் என்ற அந்த மாபெரும் இலக்கிய சிந்தனையாளர், இலக்கிய சிங்கத்தின் கர்ஜனை இந்த பிரபஞ்சம் உள்ளவரை ஒலித்துக் கொண்டே இருக்கும். அவருடைய இழப்பில் துவண்டு போய் இருக்கும் என்னைப் போன்ற எல்லா இலக்கிய ரசிகர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
கமல்ஹாசன்

எனக்கு தமிழில் ஓர் எழுத்து குறைந்தது போல பிரமையாக இருக்கிறது. ஜெயகாந்தன் போய்விட்டார் என்று அழுதுகொண்டு ஒரு நண்பர் சொன்னார். போகவில்லை என்பதுதான் என் கருத்து. அவருடைய எழுத்துக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் எழுதியதை எல்லாம் கொஞ்சத்தையாவது நாம் படிக்க வேண்டியது நம் கடமையாகும். அதுதான் ஒரு ஜெயகாந்தன் ரசிகனாக என் வேண்டுகோள்.
 
சிவகுமார்

 ஒரு கம்பன், ஒரு பாரதி, ஒரே ஒரு ஜெயகாந்தன். அந்த இடத்தை யாராலும் அடைக்க முடியாது. நடிப்பில் எப்படி சிவாஜியை யாரோடும் ஒப்பிட முடியாதோ, அதேபோல எழுத்துத் துறையில் ஜெயகாந்தனை யாரோடும் ஒப்பிட முடியாது. காட்டில் ஒரு சிங்கம், அதேபோல எழுத்துத் துறையில் ஒரு சிங்கம், ஒற்றை சிங்கம் ஜெயகாந்தன். இலக்கியம், எழுத்து, பேச்சு என அனைத்திலும் தனிப்பட்ட மனிதன், தனியான மனிதன் அந்த இடம் எப்போதும் காலியாகவே இருக்கும். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
 
இளையராஜா

நான், அண்ணன் பாஸ்கர், பாரதிராஜாவோடு முதன் முதலாக சென்னைக்கு வந்தபோது நாங்கள் போய் நின்ற இடம் ஜெயகாந்தனின் வீடுதான்.
 
நாங்கள் உங்களை நம்பிதான் வந்திருக்கிறோம் என்று சொன்னபோது, 'என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்' என்று கேட்டு எனக்குள் நம்பிக்கை விதையை விதைத்தவர் ஜெயகாந்தன்.
 
தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எளிய மனிதர்களின் குரலை ஒலிக்கச் செய்தவர். தமிழ் எழுத்துலகில் மட்டுமில்லாமல் திரையுலகிலும் தன்னுடைய அடையாளத்தை பதித்தவர் ஜெ.கே
 
தமிழ் எழுத்துலகின் புத்தெழுச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர். புதிய படைப்பாளிகளின் கலங்கரை. இலக்கியத்திற்கும், தமிழர்களுக்கும் அவர் செய்த தொண்டு மறக்க முடியாதது.
 
தமிழர்களின் தலைநிமிர்வு ஜெயகாந்தன். அவர் என்றென்றும் தமிழர்களின் நெஞ்சத்தில் நீங்காமல் நிலைத்து நிற்பார்.