1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 27 மே 2016 (20:33 IST)

சாதிக்குமா சல்மானின் சுல்தான்?

"நாங்கள் எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறேnம். இதுவரை நான் நடித்த படங்களின் வசூல் சாதனையை இப்படம் முறியடிக்கும் என்று நம்புகிறேன்" என சுல்தான் படம் குறித்து சல்மான் கான் கூறியுள்ளார். பொதுவாக தனது படங்கள் குறித்து இப்படி கூறுகிறவரல்ல சல்மான்.


 

 
சுல்தான் படத்தில் சுல்தான் அலிகான் என்ற மல்யுத்த வீரராக சல்மான் நடித்துள்ளார். ஹரியானாவின் சின்ன நகரத்தைச் சேர்ந்தவராக அவர் வருகிறார். உள்ளூர் போட்டிகளில் அசைக்க முடியாத மல்யுத்த வீரராக திகழ்கிற அவர் 2010 காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும், 2012 லண்டன் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று சர்வதேச புகழை அடைகிறார்.
 
சுல்தானில் சல்மானுடன் நடித்திருப்பவர் அனுஷ்கா சர்மா. கதைப்படி இவரும் ஒரு மல்யுத்த வீராங்கனை. சல்மானுக்கும், அனுஷ்கா சர்மாவுக்குமான காதல், அவர்களின் மல்யுத்த வாழ்க்கையுடன் இரண்டற கலந்து படத்தில் சொல்லப்படுகிறது. "நீங்கள் ஒரு விஷயத்தில் உங்களின் அனைத்து கவனத்தையும் குவிக்கும் போது, உலகின் உன்னதமான சில விஷயங்களை இழந்துவிடுகிறீர்கள். இதுதான் இந்தப் படத்தில் நான் தெரிந்து கொண்ட விஷயம்" என அனுஷ்கா சர்மா கூறியுள்ளார். மல்யுத்தத்தில் புகழ்பெற வேண்டும் என்ற லட்சியத்தில் சல்மானுடனான காதல் தடம்புரள்வதை அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
சுல்தானை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்க ஆதித்ய ராய் சோப்ராவின் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. 
 
சுல்தானின் பயிற்சியாளராக நடிக்க சில்வஸ்டர் ஸ்டாலோனை கேட்டிருப்பதாக முதலில் கூறப்பட்டது. பிறகு சஞ்சய் தத்தை நடிக்க வைக்க இருப்பதாக செய்தி வெளியானது. சஞ்சய் தத் சல்மானின் அணுக்கத் தோழர். சல்மானுக்கு விருப்பம்தான். ஆனால், ஆதித்ய ராய் சோப்ராவுக்கு அதில் உடன்பாடில்லாததால் கடைசியில் ரன்தீப் ஹுடா பயிற்சியாளர் வேடத்தில் நடிக்க வைக்கப்பட்டார். உண்மையில் சல்மான் கானுக்கு மல்யுத்த பயிற்சி அளித்தவர், லேமல் ஸ்டோவல்.
 
சுல்தானின் சவாலாக இருந்தது அனுஷ்கா சர்மாவின் கதாபாத்திரம். "ஒரு மல்யுத்த வீராங்கனைக்கான உடல்வாகு எனக்கு இல்லை என்பதால் நான் இந்த வேடத்தில் நடிக்க ரொம்பவே பயந்தேன். ஆதித்ய ராய் சோப்ராதான் எனக்கு நம்பிக்கையூட்டினார். பிறகு மல்யுத்தம் குறித்து நிறைய தெரிந்து கொண்டேன். அப்போதுதான் என்னைப் போன்ற உடல்வாகுடையவர்களும் மல்யுத்தத்தில் வெற்றிகரமாக திகழ்வதை அறிந்து கொண்டேன். அதன் பிறகே நம்பிக்கை வந்தது" என்று அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.
 
அனுஷ்கா சர்மா இந்தப் படத்துக்காக மிகவும் மெனக்கெட்டுள்ளார். முக்கியமாக ஆறு வாரங்கள் அவர் மல்யுத்த பயிற்சி எடுத்த பிறகே நடிக்க வந்தார். அனுஷ்காவின் சவால் இது என்றால் சல்மானின் சவால் வேறெnன்று.
 
இதுவரை பல படங்களில் சட்டையில்லாமல் நடித்த சல்மான் இந்தப் படத்தில் வெறும் லங்கோடு மட்டும் அணிந்து நடித்துள்ளார். வெறும் லங்கோடுடன் ஆயிரக்கணக்கான ஜனங்களின் மத்தியில் நடித்த போது அழுகையை அடக்கிக் கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார். சுல்தான் எப்படியும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்று அவர் நினைப்பதில் நிறைய காரணங்களிருக்கிறது. 
 
இந்தியின் மூன்று கான் நடிகர்களில் அமீர் கான் லகான் என்ற விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடித்துள்ளார். கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றதுடன் ஆஸ்கர் போட்டியிலும் அப்படம் இறுதிச்சுற்றுவரை வந்தது. ஷாருக்கான் ஹாக்கியை மையப்படுத்திய, சக் தே இந்தியா படத்தில் நடித்துள்ளார். அதுவும் வெற்றி. சல்மான் கானின் முதல் விளையாட்டை மையப்படுத்திய படம், சுல்தான். இதன் வெற்றி எப்படியாக இருக்கும் என்பதை அறிய இந்தி திரையுலகு ஆவல் கொண்டுள்ளது.
 
சுல்தானின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இரண்டே நாளில் 52 லட்சம் பார்வையாளர்களை ட்ரெய்லர் பெற்றுள்ளது. இந்த ஆர்வம் படம் பார்ப்பதிலும் இருந்தால் சுல்தான் இந்தியாவில் மட்டும் 300 கோடியை தாண்டும் என்பது நிபுணர்களின் கருத்து.
 
ரம்ஜானை முன்னிட்டு ஜுலை முதல் வாரத்தில் சுல்தான் திரைக்கு வருகிறது.