வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (15:01 IST)

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆஸ்கர் கிடைக்காதா?

இந்த மாத இறுதியில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. எல்லா விருதுகளையும் போலவே ஆஸ்கர் விருதுகள் மீதும் விமர்சனங்கள் உண்டு. இந்த ஆண்டு விமர்சனத்தின் கடுமை அதிகம்.


 
 
கறுப்பின நடிகர்களுக்கு ஆஸ்கர் கிடைப்பதில்லை என்று கூறி ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக வில் ஸ்மித் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. பூலோக சொர்க்கமாக சித்தரிக்கப்படும் அமெரிக்காவில் இன்றும் இனவெறி நிலுவையில் உள்ளது. கறுப்பினத்தவர்களை வெள்ளை போலீஸ் காரணமின்றி சுட்டுக் கொல்வதை கண்டித்து நடந்த பேரணியில்தான் இயக்குனர் குவெண்டின் டொரன்டினோ போலீஸை கொலைகாரர்கள் என்று விமர்சித்தார். பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி தனக்கு அளிக்கப்பட்ட பதக்கத்தை ஆற்றில் விட்டெறிந்த கதை நமக்கு தெரியும்.
 
ஆஸ்கர் விருதுகளில் அனைத்துவிதமான அரசியலும் உண்டு. இயக்குனர் மார்ட்டின் ஸகார்சஸி ஏசுவை மையப்படுத்தி எடுத்த, லாஸ்ட் டெம்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட் படம் காரணமாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது அவருக்கு மறுக்கப்பட்டு வந்தது. தனது படத்தில் ஏசு விபச்சார விடுதிக்கு செல்வது போல் ஸ்கார்சஸி சித்தரித்திருந்தார். இதற்கு மேலும் ஸ்கார்சஸிக்கு ஆஸ்கர் மறுக்க முடியாது என்ற நிலையில், கொரியப் படமான இன்பேர்னல் அஃபையர்ஸ் படத்தை தழுவி அவர் எடுத்த, த டிபார்டட் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை அளித்தனர். இதேபோல் பல உதாரணங்கள்.
 
பிரபல நடிகர் இயான் மெக்கெல்லன் வேறொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தங்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று அறிவித்துக் கொண்ட நடிகர்களுக்கு ஆஸ்கர் விருது அளிக்கப்படுவதில்லை என அவர் கூறியுள்ளார். அதற்கேற்ப ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இதுவரை விருது அளிக்கப்பட்டதில்லை.
 
இந்த குற்றச்சாட்டு தவறு என்று ஆஸ்கர் கமிட்டி நிரூபிக்க விரும்பினால், எனக்கு ஆஸ்கர் விருது தரலாம் என்று கிண்டலாக இயான் மெக்கல்லன் கூறியுள்ளார். இயான் மெக்கல்லன் தன்னை ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர்.
 
இன்னொரு ஐரணியையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆஸ்கர் விருது கிடைப்பதில்லையே தவிர, திரையில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்தவர்கள் தங்கள் நடிப்புக்காக ஆஸ்கர் விருது வாங்கியுள்ளனர் என கூறியுள்ளார். இயான் மெக்கல்லன் கூறியது உண்மை. டாம் ஹங்க்ஸ், பிலிம் செய்மர் ஹாப்மேன், ஷான் பென் போன்றவர்கள் ஓரினச்சேர்க்கையாளராக நடித்ததற்காக ஆஸ்கர் விருது வாங்கியுள்ளனர்.
 
2005 -இல் வெளியான ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றிய Brokeback Mountain திரைப்படம் சிறந்த இயக்குனர் உள்பட மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வருட ஆஸ்கர் விருதுகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகும் என்பதை இந்த மணிச்சத்தங்கள் உறுதி செய்கின்றன.